துயிலும் இல்லங்களை புனரமைப்பதற்கு இது சரியான தருணமல்ல:சுரேஸ்

SURESHமாவீரர் துயிலும் இல்லங்களை மீளப் புனரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சாவகச்சேரி பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஒரு பிரதேசசபையின் தனிப்பட்ட முடிவு என்றும்,

அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சாவகச்சேரி பிரதேசசபையினால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கவில்லை.போரின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீளப் புனரமைக்க கோரும், தீர்மானத்தை சாவகச்சேரி பிரதேசசபையில் கொண்டு வர முன்னர், உறுப்பினர்கள் அதுபற்றி எமக்குத் தெரிவிக்கவும் இல்லை.

அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றும்படி, அவர்களை நாம் கோரவும் இல்லை.வடக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன.இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றும் பிரச்சினை, போரினால் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.

அதேவேளை, போரில் தமது அன்புக்குரியவர்களை நினைவு கூரும் உரிமை மக்களுக்கு உள்ளது.போரில் தமது பிள்ளைகளையோ, அன்புக்குரியவர்களையோ, இழந்தவர்களை நினைவு கூருவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அது சரியான வழிமுறைகளின், ஊடாக சரியான தருணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது அதற்குப் பொருத்தமான நேரம் அல்ல.” என்று அவர் தெரிவித்துள்ளார்.சாவகச்சேரி பிரதேசசபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிறிரஞ்சன் கொண்டு வந்த தீர்மானத்தை, பிரதி தவிசாளர் யோகராசா வழிமொழிந்திருந்தார்.

இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையில் தீர்மானத்தைக் கொண்டு வந்த உறுப்பினர் சிறிரஞ்சன் சிறிலங்கா காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்கான காரணம் என்ன, அதனை ஊக்குவித்தவர்கள் யார் என்று அவரிடம் சிறிலங்கா காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.

இதற்கிடையே, சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தைப் புனரமைக்க சில குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, கடந்தவாரம் 200 சிறிலங்கா காவல்துறையினர் கரைச்சி பிரதேச துயிலும் இல்லத்தில் குவிக்கப்பட்டதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான தீர்மானம் கொண்டு வந்தவரிடம் விசாரணை!

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றம்