யாழ்ப்பாணம் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது என்று பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தின் உபவேந்தரை நீக்குமாறு விஞ்ஞான பீட விரிவுரையாளர்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி பிரபாத் ஜய சிங்க தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் முறையாக நியமிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின் றார்கள் என்றும் ஜயசிங்க தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத் துணை வேந்தரின் பதவிக் காலம் முடிவுக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு அதன் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்கு எதிராக அந்தப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா விடம் வினவியபோது, யாழ்.பல்கலைக் கழகம் தொடர்பில் இது வரை தமக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதால் அதற்கமைய நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.