Ad Widget

தீர்வு கண்டால் கூட்டமைப்பின் அரசியல் செத்துவிடும்: பசில்

pasil-rajapaksha‘தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும’ என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

‘எதிர்கால சந்ததியினர் துப்பாக்கியும் சயனைட்டும் ஏந்தும் நிலைக்கு அவர்களை தள்ளாதீர்கள். அவர்களின கைகளில் புத்தகமும் கொப்பியும் கொடுத்து வளவான எதிர்கால சந்ததியினரை உருவாக்க முன்வாருங்கள்’ என்றும் அவர் வேண்டுகோள் விடுததார்.

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடம் சுபியான் மௌலவியின் ஏற்பாட்டில் யாழ். மாணிப்பாய் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் பொதுமக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ‘தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும்’ என்று சுட்டிக்காட்டினார்.

‘கடந்த காலங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உள்ளுராட்சி சபைகள் சரியான முறையில் இயங்கவில்லை. இவ்வாறான உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிக்கக்கூடிய பலமோ திறமையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் இல்லை. ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பது போல தங்களில் குறைபாடுகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை குறைகூறி வருகின்றார்கள். அரசாங்கம் தரவில்லை என்று கூறுகிறார்கள்.

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி கடந்தகால தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றி பெற்ற போதிலும் அவர்களால் மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ளாததை அனைவரும் உணர வேண்டும்.

அமைதி, சுதந்திரம், அபிவிருத்தி மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய வகையில் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் நினைவில் நிறுத்தி எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து அபிவிருத்தியையும் மேம்பாட்டையும் கருத்திற்கொண்டு எமக்கு வாக்களிக்க வேண்டும்’ என்றும் அமைச்சர் பசில் கேட்டுக்கொண்டார்.

‘கூட்டமைப்பினர் முதலமைச்சர் வேட்பாளரான விக்னேஸ்வரன் கொழும்பைச் சேர்ந்தவர். அவருக்கு வடமாகாணத்தைப் பற்றியோ மக்களின் வாழ்வுநிலை பற்றியோ எதுவுமே தெரிந்திருக்க வாய்பில்லை. இப்படிப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அதன் முதலமைச்சர் வேட்பாளரும் மக்களின் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுத்தரமாட்டார்கள்.

இங்குள்ள விவசாயிகள் பற்றியும் கடற்றொழிலாளர்கள் பற்றியும் நான் நன்கு அறிந்து வைத்திருக்கின்றேன். ஆனால் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவதற்கு வாய்ப்பில்லை. தொண்டமானாறு மற்றும் அராலியில் உள்ள அணைக்கட்டில் எத்தனை கதவுகள் இருக்கின்றன என்பது முதலமைச்சர் வேட்பாளருக்கு தெரியுமா?

நாட்டின் 8 மாகாணங்களிலும் அந்தந்த மாகாண மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினால் மாகாணசபைகள் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தி அதனூடாக அதன் அதிகாரத்தை பெறுவதற்கு வடமாகாண மக்களிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 21ஆம் திகதி நடத்துவதற்கான வாய்ப்பினை முதன் முதலாக வழங்கியுள்ளார்.

கடந்தகால தேர்தல்களின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேச சமூகமும், புலம்பெயர் உறவுகளும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து நிதியினை பெற்று அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியுமென மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வெற்றிபெற்ற போதிலும் அவர்களால் இதுவரையில் எதையும் சாதிக்க முடியவில்லை என்பதை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும்’ என்று பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

Related Posts