தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு பின் நிற்பது ஏன்? குகேந்திரன் கேள்வி

K-V-Kukantheran-epdpசம்பந்தன் ஐயா தனி நாடு கேட்கவில்லை என்றால், ஏன் இன்று கிடைக்கவுள்ள தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு, அரசுடன் பேசுவதற்குப் பின் நிற்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் தெரிவித்தார்.

மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக நல்லூர் ஆத்திசூடி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, அப்பகுதி மக்களது வாழ்வியல் தேவைகள் பற்றி அறிந்துகொண்டபின் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அமிர்தலிங்கம் ஐயா தொடக்கம் சம்பந்தன் ஐயா வரை தழிழ்த் தேசியத்தை பேசித்தான் மக்களை உசுப்பேத்தி விடுகின்றனர். அன்று தனிநாடு கேரிய சம்பந்தன் ஐயா இன்று தலைகீழாகப் பேசுகின்றார். தாங்கள் தமிழீழத்தைக் கோரவில்லை என்றும் அதை அன்றே எதிர்த்தார் என்றும் கூறுகின்றார்.

அப்படியானால், இவர் புலிகளின் தலைவர் தான், தனி நாட்டைக்கோரி போரிட்டு இத்தனை அழிவுகளும் ஏற்படக் காரணமானவர் என்று பொருள்படக்கூற முயல்கின்றார் என எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் இன்று அரசியல் ரீதியான விடயங்களில் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் இனமாக இருக்கின்றனர். கடந்தகால தமிழ் தலைமைகள் செய்த தவறுகளால் தலை நிமிர முடியாத அளவிற்கு தமிழர்களை தனிமைப்படுத்திவிட்டது.

1977இல் தமிழ்த் தலைவர்களால் தூண்டப்பட்டே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை வந்தது, என்பதை தமிழர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

1987இல் வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையை இந்தியா உருவாக்கி பொலிஸ் படையுடன் கூடிய அரசை வரதராஜப் பெருமாள் தலைமைக்கு கொடுத்தது. இந்தியாவின் உள்நுழைவை விரும்பாத பிரேமதாச புலிகளுடன் கைகோர்த்து இந்தியாவை வெளியேற்றியது வரலாற்று பதிவான விடயம். இந்தியா தந்த மாகாண சபையை ஏற்றிருந்தால் தமிழர்களது போராட்டம் திசைமாறிச் சென்றிருக்காது.

இன்று போர்க்குற்ற விசாரணையை கொண்டு வந்துள்ள உலக நாடுகள் அன்று தமிழனை அழிக்க அனைத்து ஆயுதங்களையும் கொடுத்தனர். முள்ளிவாய்க்காலில் தமிழர்களது கதறல்களையும் செய்மதியின் ஊடாக பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். ஆனால் எவரும் அதை தடுத்து நிறுத்தி மக்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. இந்த நிலைமைக்கு தமிழர்களது கடந்தகால தவறுகள்தான் காரணமாகின.

இந்தியா தந்ததை விட அதிகளவு அதிகாரத்தைக் கொண்ட மாகாண சபையை சந்திரிக்கா அரசு தர முயன்ற போது, சிங்களக் கட்சிகளுடன் இணைந்து எதிர்த்து கிடைக்கவிருந்த தீர்வை தடுத்தி நிறுத்தியதும் இந்த சம்பந்தன் ஐயா தலைமையிலான கூட்டணியினர் தான் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor