தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் ஆபத்தான நிலையில்! கணவன் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒரு பிள்ளையின் இளம் தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாயின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி காலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

22 அகவையுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தீயில் எரிந்து தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதான வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் கடந்த 05.10.21 அன்று இவரின் கணவன் மல்லாவி பொலிசாரால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த கணவனின் தாயார் கருத்து தெரிவிக்கையில், குடும்ப தகராறில் குறித்த பெண் தனக்கு தானே தீயினை பற்ற வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் தாயார், தனது பிள்ளையினை அவரது கணவர் தீ வைத்து எரித்துள்ளதாகவும் இதற்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீக்காயங்களுக்கு உள்ளான பெண்ணின் இரண்டரை அகவை பிள்ளை தந்தையின் தாயாரின் அரவணைப்பிலேயே தற்போது உள்ளது.

மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.