திறம்படப் பணியாற்றுவோரை பேரவை உறுப்பினர்களாக்குக, யாழ், பல்கலைக்கழகத்தின் மூன்று தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை

jaffna-universityயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தற்போதுள்ள பேரவை உறுப்பினர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர்களாகவும், அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களாகவுமே உள்ளனர் எனத் தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள மூன்று தொழிற்சங்கங்கள், பேரவை உறுப்பினர்கள், அவர்களது முக்கிய பணியான பல்கலைக்கழகச் செயற்பாடுகளை திறனாய்வு செய்வதில் வல்லமையற்றவர்களாகவும், பல்கலைக்கழகச் செயற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை கண்டறியக் கூடியதான வினாக்களைத் தொடுப்பதற்கு முடியாதவர்களாயும் உள்ளனர் என்றும் சுட்டிக் காட்டியுள்ளன.

அவ்வாறானவர்களை விடுத்து, பல்கலைக் கழகம் அதன் கல்விசார் நடவடிக்கைகளில் நன்றாகப் பணியாற்றவும், வளச்சிக்குப் பங்களிப்பு வழங்கக் கூடியவர்களை பேரவை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்றும் அவை கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தக் கோரிக்கைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அந்தச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்.பல்கலை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலை விஞ்ஞான ஆசிரியர் சங்கம் மற்றும் யாழ்.பல்கலைக் கல்வி சாரா ஊழியர் சங்கம் ஆகியன இணைந்தே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

“புதிய பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ள தருணத்தில், பல்கலைக்கழகத்தின் வளமான எதிர்காலத்தில் கரிசனை கொண்டவர்கள் என்ற ரீதியில் நாம் உங்களிடம் புதிய பேரவை உறுப்பினர்கள் தெரிவு தொடர்பான கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

அரசியல் ஆதரவுடன் நியமிக்கப்பட்ட கடந்த சில பேரவைகள் தொடர்பான அதிருப்தி பல்கலைக்கழக மட்டத்திலும் பொதுமக்களிடையேயும் நிலவுகின்றது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டுவதுடன், அப்படியான தவறான பேரவைகளின் நியமனமானது, பல்கலைக்கழக நிர்வாக மற்றும் கல்விசார் நடவடிக்கைளின் மீது பேரவை கொண்டிருக்க வேண்டிய மேற்பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போதனைசார் மற்றும் போதனைசாரா ஊழியர்கள் நியனத்திலும் பெரும் முறைகேடுகளும், சலுகை காட்டுதல்களுக்கும் வழிகோலியது. இது பல்கலைக் கழகத்தின் தரத்தைக் குறைப்பதுடன், சமூகத்தை வளப்படுத்துவதிலும் அதன் பங்கைப் பாதிக்கும்.

உள்ளக விசாரணைகளில் மாணவிகளிடத்தில் உளரீதியாக மட்டுமன்றி உடல் ரீதியாகவும் தொந்தரவுகளைச் செய்தார் என்று உறுதிப்படுத்தப்பட்ட ஆசியர் ஒருவர் தொடர்பில் கடந்த ஒருவருடமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படாது, அந்த ஆசிரியர் தொடர்ந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பேரவையின் முறைகேடான நியமனத்துக்கும் தவறான திட்டமிட்ட ஒருபக்க சார்பான அதிகார துஷ்பிரயோகத்துக்கும் சிறந்த ஒரு எடுத்துக் காட்டாகும்.

தற்போதுள்ள நிலைமை பல்கலைக்கழகத்தில் அதிருப்தியையும் அராஜகத்தையும் வளர்ப்பதாயுள்ளது. இதனால் யாருக்கும் நன்மை விளையப்போவதில்லை.

பல்கலைக்கழகம் அதன் கல்விசார் நடவடிக்கைகளில் நன்றாகப் பணியாற்றவும் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யவும் ஏற்றவகையில் நாம் முன்மொழியும் நபர்களை பேரவை உறுப்பினர்களாக நியமிக்குமாறு தங்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்” என்றும் அந்தச் சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மூன்று சங்கங்களும், பேராசிரியர் வீ.தர்மரட்ணம் மற்றும் போராசிரியர் சி.சிற்றம்பலம் ஆகியோரின் பெயர்களை ஏகமனதாக முன்மொழிந்துள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக பேரவையின் பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் முடிவுறுகின்றது.

அதையடுத்து புதிய பேரவை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்தநிலையிலேயே மேற்குறிப்பிட்ட சங்கங்கள் தமது கோரிக்கைகளை ஜனாதிபதிக்கும், உயர் கல்வி அமைச்சருக்கும் அனுப்பி வைத்துள்ளன.

Recommended For You

About the Author: Editor