திறமைக்கு பேதங்கள் இல்லை! பொலிஸ் துறையில் தமிழர்கள் இணைவது அவசியம்

திறமைக்கு மொழி, சமயம் அல்லது ஆண், பெண் என்ற பேதங்கள் இல்லை எனவும், அவ்வாறான பேதமற்ற, திறமைக்கு முன்னுரிமையளிக்கும் நிலையை பொலிஸ் துறையில் உருவாக்குவதே தமது அரசாங்கத்தின் நோக்கம் எனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,

இலங்கை பொலிஸாருக்கு நீண்ட வரலாறு உண்டு. எந்தவொரு நாட்டிலும் தீவிரவாதம் இருப்பின் அவர்கள் முதலில் பொலிஸாருக்கு எதிராகவே செயற்படுவர். இலங்கையிலும் அவ்வாறானதொரு நிலையே காணப்பட்டது என சுட்டிக்காட்டினார்.

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முதலில் தோற்கடித்தது அப் பகுதி பற்றி நன்கு அறிந்த தமிழ் பொலிஸாரே எனவும் இதன்போது அவர் நினைவூட்டினார்.

இதற்கமைய இலங்கையில் தீவிரவாதத்தால் முதலில் மரணித்தது பொலிஸ் பரிசோதகர் பெஸ்டியன் பிள்ளை உள்ளிட்ட தமிழ் பொலிஸாரே என்று கூறவேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது பல இனங்களும் உள்ளடங்கி இருந்தன, அதுபோன்றதொரு நிலையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது, எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அடுத்த வருடம் முதல் பொலிஸ் துறையில் தமிழ் அதிகாரிகளை நியமிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் இராணுவ செயற்பாடுகள் நிறைவடைந்த பகுதிகளை மீண்டும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பகுதிகளில் சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டியது பொலிஸாரின் கடமை, அந்தக் கடமைகளை உரிய முறையில் செய்யவே தமிழ் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது எனவும் அவர் கூறினார்.

எனவே, அந்தப் பகுதிகளுக்கு மொழி தெரிந்த பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும். பொலிஸ் சேவையில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழிகளான தமிழ் மற்றும் சிங்களத்தை அறிந்திருக்க வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.