திருநெல்வேலியில் மணிக்கூட்டு கோபுரம்

பலாலி வீதி திருநெல்வேலி சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் மணிக்கூட்டு கோபுரம் ஒன்றினை விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தலைவர் வசந்தகுமார் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளை அலங்கரிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே மணிக்கூட்டு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளை அலங்கரிக்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய முதற்கட்டமாக பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தியில் உள்ள சபைக்கு சொந்தமான வளைவில் மணிக்கூட்டு கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி கடந்த வாரம் இடம்பெற்ற சபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோபுரம் சபை நிதியில் இருந்து மிக விரைவில் கட்டப்படவுள்ளது.

அத்துடன் சபைக்கு உட்பட்ட ஏனைய இடங்களிலும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்படும். மேலும் சபையின் தீர்மானத்துடன் பலாலி, பருத்தித்துறை , காங்கேசன்துறை, ஆடியபாதம் போன்ற சபைக்கு உட்பட்ட வீதிகளில் நல்லூர் பிரதேச சபை வரவேற்கின்றது என்ற வாசகம் பொறிக்கப்பட்ட வளைவினையும் அமைக்க உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.