திருடர்களுக்கும் பஸ் நடத்துனர்களுக்கும் தொடர்பு! – போக்குவரத்துப் பொலிஸார்

Theft_Plane_Sympol-robberyயாழில் போக்குவரத்தில் ஈடுபடும் சில பஸ்களில் நடத்துனர்கள் திருடர்களை செற்பண்ணி திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதாக யாழ்.போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“உங்கள் பணப்பைகளையும் கைத்தொலைபேசிகளையும் நீங்களே கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் களவுபோனால் எங்களையும் பொலிஸ் நிலையத்திற்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டாம்” என தனியார் சாரதிகளும் நடத்துனர்களும் தெரிவிப்பதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காலையிலும், மாலையிலும் அதிகளவில் பயணிகள் பேருந்துகளில் பயணிக்கின்றனர். அவ்வேளையில் பயணிகளிடம் கிடைப்பதை சுருட்டவென திருட்டுக் கூட்டங்களும் பேருந்துகளில் ஏறுகின்றனர்.

இவ்வாறு பொருட்களைப் பறிகொடுக்கும் சம்பவம் அண்மையில் அதிகரித்துள்ளது.

யாழ் – கொடிகாமம் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் இவ்வாறான சம்பவங்கள் தற்போது அடிக்கடி நடைபெறுவதாகவும் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று கூட இவ்வாறான சம்பவம் ஒன்று நிகழ்ந்து பணத்தைத் திருடியவரும் அகப்பட்டார். இதனால் பேருந்து சேவை காலதாமதமாகவே இடம்பெறுகின்றது. எனவே பயணிகள் தங்கள் உடமைகளை மிக அவதானத்துடன் வைத்திருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுரை கூறுகின்றனர்.

பணம், கையடக்கத் தொலைபேசி, நகைகள் என்பன சனநெரிசல் உள்ள பேருந்துகளில் திருடப்படும் சம்பவங்கள் தற்போது அதிகளவில் இடம்பெறுவதாகவும் பொதுமக்களே அதிகளவில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.