மகாதேவா ஆச்சிரமத்தின் சிறுவர் இல்லத்தில் தங்கியிருக்கும் விபூசிகாவை அவரின் தாயான ஜெயக்குமாரியிடம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த மனுவை தாயாரான ஜெயக்குமாரியின் சார்பில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் 7 சட்டத்தரணிகள் தாக்கல் செய்யவுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இணைவதற்கு நடவடிக்கை எடுத்தார் எனக் கூறப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட கோபிக்கு புகலிடம் வழங்கினர் என்ற குற்றச்சாட்டில் ஜெயக்குமாரியும் அவரின் ஒரு வருடத்துக்கு முன்னர் மகளான விபூசிகாவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகினர்.
ஜெயக்குமாரியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் விபூசிகா சிறுமி என்பதால் அவரை சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் ஜெயக்குமாரியை கொழும்பு நீதிமன்றம் அண்மையில் பிணையில் விட்டது குறிப்பிடத்தக்கது.