யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிவிருத்திக்கு உதவ புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் முன்வரவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அழைப்புவிடுத்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளநிலையில் புலம் பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் இப்பகுதிகளில் முதலீடு செய்து போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது சிறீலங்கா அரசாங்கமும் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அந்த வாய்ப்பை புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் பயன்படுத்திக்கொண்டு வடக்குக் கிழக்கில் முதலீடு செய்ய முன்வரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டு இறுதிக்குள் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.