Ad Widget

தாக்க வரும் கடும் சூறாவளி : 7.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்க நெருங்கிவரும் கடும் சூறாவளியின் விளைவாக மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் வசிக்கும் சுமார் ஏழரை லட்சம் மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

‘மெலான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளியின் விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 20 மாகாணங்களில் கடுமையான புயல்காற்றுடன் சுமார் 12 அங்குலம் வரையிலான கனமழையும், அதனால், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 4 மீட்டர் உயரத்துக்கு வெள்ளப்பெருக்கும் உண்டாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துப்போய் உள்ளனர்.

இதையடுத்து, 40 உள்நாட்டு விமானச் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 73 பயணிகள் படகுகளும், நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் படகுச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் 8 ஆயிரம் மக்கள் வெவ்வேறு தீவுகளில் நிற்கதியாக தவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிலிப்பைன்ஸில் ஆண்டுதோறும் சுமார் 20 சூறாவளிகளும், புயல்களும் கோரத்தாண்டவம் ஆடிவருகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹயான் புயலுக்கு சுமார் 8 ஆயிரம் பேர் பலியானதையடுத்து, ஆபத்தான பகுதிகளில் வசித்துவரும் சுமார் ஏழரை லட்சம் மக்களை அந்நாட்டின் பேரிடர் மீட்பு குழுவினர் வெளியேற்றி, பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.

Related Posts