தலைகீழாக நின்றாலும் கைதானோரை உடன் விடுவிக்க முடியாது; அவர்கள் போதை கடத்தல்காரர்கள் என்கிறார்- அமைச்சர் ராஜித

தமிழக மீனவர்கள் கூறுவது போல ஒரு தமிழக மீனவராவது இலங்கைச் சிறையில் இல்லை. அனைவரும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டனர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்தியர்களே இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மாறாக இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 21 இலங்கை மீனவர்களையும் இந்தியா விடுவிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 இலங்கைக் கடற்படையினரால் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறைகளில் தடுத்துவைக் கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஒருவார காலமாகத் தமிழக இராமநாதபுரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், இன்று வியாழக்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர் எனவும் இராமநாதபுரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் கூறுவது போன்று மீன்பிடித் தொழிலில் இலங்கைக் கடற்பரப்பினுள் பிரவேசித்து கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப் பட்டுவிட்டார்கள்.
இப்போது இலங்கைச் சிறையில் தமிழக மீனவர்கள் எவரும் இல்லை. ஆனால், போதைப்பொருள் கடத்தலின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களே இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க முடியாது. சட்டம் என்று ஒன்று உள்ளது.அதன்படியே நாம் நடவடிக்கை எடுப்போம். தமிழக மீனவர்கள் தலைகீழாக இருந்து போராட்டம் நடத்தினாலும் கூட இவர்களை உடன் விடுவிக்க முடியாது.
அதே போன்று இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 21 இலங்கை மீனவர்களை முதலில் இந்தியா விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அமைச்சர்.
இதேவேளை, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவித்துள்ளோம் என இலங்கைக் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
அத்துடன், கடந்த 28ஆம் திகதி இலங்கைக்கு கடத்திவர முயற்சிக்கப்பட்ட 2 கிலோகிராம் ஹெரோயினுடன் 5 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்தும் தடுப்பில் உள்ளனர் எனவும அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 இலங்கை மீனவர்களில் 15 பேர் ஆந்திராவிலும், 6 பேர் அந்தமானிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கடற்றொழில் அமைச்சரின் செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: webadmin