விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப் பகிர்வுப் பத்திரம் சட்ட வலுவற்றது. எனவே, அந்த விதிகள் சட்ட வலுவற்றது என தீர்ப்பளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும் என விடுத்த வேண்டுகோளை பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இந்த வழக்கை நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பொதுமக்களை தடுத்து நிறுத்தினார் எனக் குற்றம் சுமத்தி தயா மாஸ்டருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவருக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு காலாவதியாகியுள்ள அவசரகால விதிகளின் கீழ் இந்த வழக்கில் பகிரப்பட்டுள்ள குற்றப்பத்திரம் சட்ட வலுவற்றது என வாதாடினார்.
அவர் தனது வாதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அந்தக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றம் தொடர்பான செயல் உண்மையிலேயே சட்டப்படி குற்றச் செயலல்ல.
இந்தக் குற்றச்சாட்டில் அவசரகால விதிமுறைகள் என தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் சட்ட ரீதியான விதிமுறைகள் அல்ல.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இந்த விதிமுறைகள் அப்பாற்பட்டவை.
அது மட்டுமல்லாமல், அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவனவாகவும் இந்த விதிமுறைகள் அமைந்திருக்கின்றன.
இயற்கை நீதியின்படி இந்த விதிமுறைகள் நியாயமற்றவை என்பதுடன் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன.
எனவே, இந்தக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அவசரகால விதிகள் சட்ட வலுவற்றவை என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்ய வேண்டும்.
அதேவேளை, இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் 7 ஆம் பகுதியின் ஈ பிரிவின் கீழ் (7 (ஈ)) குற்றம் புரிந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. அதுவும் பிழையானது.
அரச சட்டத்தரணி கூறுவது போன்று அது சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதே சரியானது என ஏற்க முடியாது.
ஏனெனில் வடமாகாணத்தின் நிர்வாக மொழி தமிழ் மொழியாகும். ஆகவே நீதிமன்றத்தின் மொழியும் நிர்வாக மொழியாகிய தமிழ் மொழியிலேயே குற்றப்பத்திரிகை வழங்கப்பட வேண்டும்.
அந்த வகையிலும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சட்ட வலுவற்றது. ஆனாலும் இந்தப் பிழையைத் தாங்கள் திருத்துவதாக அரச சட்டத்தரணி தெரிவித்திருக்கின்றார். அவர்கள் அவ்வாறு செய்யும்போது எங்களுடைய ஆட்சேபணையை நாங்கள் தெரிவிப்போம் என்றார் சட்டத்தரணி சுமந்திரன்.
ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பல்வேறு ஆதாரங்களை முன்வைத்தும், பல்வேறு மேற்கோள்களைக் காட்டியும் சட்டத்தரணி சுமந்திரன் செய்த வாதத்தை செவிமடுத்த நீதிபதி சசி மகேந்திரன், ஒரு குற்றப்பத்திரிகையில் ஆதாரம் காட்டப்பட்டுள்ள விதிமுறைகள் சட்ட வலுவற்றது என தீர்ப்பளிப்பதற்கு மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றதா என்பதை ஆராய வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் எழுத்து மூலமாக தங்களுடைய சமர்ப்பணங்களை முன் வைக்க வேண்டும் எனக் கூறி இந்த வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராகிய தயா மாஸ்டர் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், நிரான் அங்கிட்டல் ஆகியோரும் அரச தரப்பில் இந்த வழக்குக்கென சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து வருகை தந்திருந்த அரச சட்டவாதி ஆசாத் நாவவியுடன் அரச சட்டத்தரணி ஸக்கி இஸ்மாயிலும் முன்னிலையாகியிருந்தனர்.