தமிழ் மொழியை புறக்கணிக்கும் பொலிஸார்! குற்றச் செயல்களை தடுப்பதில் பொலிஸ் நடவடிக்கை போதாது – மக்கள் பிரதிநிதிகள் அதிருப்தி

வடக்கில் பொலிஸார் தொடர்ந்தும் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில பொலிஸ் நிலையங்களில் இன்னும் தமிழில் முறைப்பாடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. பொலிஸாரினால் அனுப்பப்படும் கடிதங்கள் கூடத் தனிச் சிங்களத்திலேயே உள்ளன.

meeting-police-people

இவ்வாறு யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலர்கள் நேற்று பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டது. இதனால் பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிரதேச செயலர்களுக்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயும் சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வடக்கில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் நூறு வீதம் தமிழில் முறைப்பாடு செய்யப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பிரதேச செயலர்கள் பொலிஸாரின் கூற்றை முற்றாக மறுத்ததுடன் தமிழில் முறைப்பாடு பதிவு செய்யப்படுவதில்லை என்பதற்கான ஆதாரங்களையும் அங்கு அம்பலப்படுத்தினர்.

பிரச்சினைகள் குறித்து தெரிவிக்க பொலிஸ் நிலையங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அங்கு தமிழில் பேசுவதற்கு எவரும் இருக்கமாட்டார்கள் பின்னர் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸாரால் கூறப்படுகிறது. இங்கு அநேகமான பொலிஸ் நிலையங்களில் இந்தப் பிரச்சினை தொடர்கிறது.

சாவகச்சேரி பொலிஸ் நிலையம் நுணாவிலில் அமைந்துள்ளது. பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் வீடு ஒன்றில் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

அது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொலிஸார் அன்று வரவேயில்லை. மறுநாள் காலை 8.30 மணியளவிலேயே சம்பவ இடத்துக்குச் பொலிஸார் சென்றுள்ளனர் என்று கூட்டத்தில் பிரதேச செயலர்களால் சுட்டிக்காட்ட்பபட்டது.

இது தவிர பொலிஸாரினால் அனுபபி வைக்கப்படும் கடிதங்கள் கூடத் தனிச் சிங்களத்திலேயே அனுப்பப்படுகின்றன. வவுனியா பொலிஸாரால் அண்மையில் அவ்வாறு தனிச் சிங்கள மொழியில் கடிதம் அனுப்பப்பட்ட விடயமும் அங்கு எடுத்துக் காட்டப்பட்டது.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரிகள், தவறுதலாகச் சில சம்பவங்கள் அவ்வாறு இடம்பெறுகின்றன. அதனைத் திருத்துகிறோம். வவுனியா சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்துகிறோம் – என்று கூறினர்.

மற்றும் குடா நாட்டில் பரவலாக இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை. மணல் கடத்தல், போதைப்பொருள் விற்பனை என்பன தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்று விசனம் வெளியிடப்பட்டது.

இவற்றைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் குறித்த இடங்களில் தற்காலிக பொலிஸ் சாவடிகளை அமைத்துக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனப் பிரதேச செயலர்களால் தெரிவிக்கப்பட்டது.

அரியாலை கிழக்கு, ஊர்காவற்றுறை, மண்கும்பான், மிருசுவில் – பாலாவி, வடமராட்சி உட்பட பல பிரதேசங்களில் இருந்து மணல் கடத்தப்படுகிறது. மருதங்கேணியில் கண்டல் தாவரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு விறகுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

பொன்னாலை, ஊர்காவற்றுறையில் சட்டவிரோதமாகப் பனைகள் தறிக்கப்பட்டுக் கடத்தப்படுகின்றன. மாதகலில் அதிகளவான கஞ்சா அண்மையில் மீட்கப்பட்டது. சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை தொடர்கிறது எனப் பல விடயங்கள் நேற்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டன.

இவற்றைத் தடுப்பதற்குப் பொலிஸாரின் நடவடிக்கைகள் போதுமானளவாக இல்லை எனவும் அங்கு குற்றம் சுமத்தப்பட்டது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இனங்கண்டு பொலிஸாருக்கு தகவல் கூறினால் அந்த இரகசியம் பொலிஸார் மூலமாகவே வெளியே கசிய விடப்படுவதால் இவ்வாறு தகவல் வழங்குபவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்குப் பதிலளித்த பொலிஸார் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றி எவரும் பொலிஸாருக்குத் தகவல் வழங்க முடியும். தகவல் தருபவர்கள் பற்றிய விவரங்கள் எதுவுமே வெளியிடப்படமாட்டாது என்று உறுதியாகக் கூறினார்.

தற்காலிக பொலிஸ் சாவடிகள் அமைப்பது பற்றி சாதகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

ஈ.பி.டி.பி.க்கு கலங்கம் ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை: டக்ளஸ்