தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையோடு பலத்தை வெளிக்காட்ட வேண்டும்: சம்மந்தன்

sampanthanதமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வன்முறைகள் மூலம் அடக்கப்படுவதற்கு எதிராக ஒற்றுமையோடு எங்கள் பலத்தை வெளிக்காட்ட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

யாழில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“யுத்தம் முடிந்த பின்னரும் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய எண்ணம் அரசாங்கத்திடம் இருக்கவில்லை. ஏனெனில், வட மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு கிடைக்காது என்று தெரிந்திருந்தமையால் ஆகும்.இருந்தும் அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை பல சர்வதேச நாடுகளின் அழுத்தங்களினால் நடத்தி முடித்திருக்கின்றது.

சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் நடந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள வெற்றியினை கொண்டு அனைத்து இனங்களையும் சமமாக மதித்து, மக்களுக்கு நீதி வழங்கவும் பாதுகாப்பு கிடைக்கவும் ஏற்ற வழிமுறைகளை புதிய மாகாண சபை உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும்.

1990ஆம் ஆண்டு வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது ஒரு கசப்பான அனுபவம். இனிமேலும் இவ்வாறான வன்முறைச் சம்பவம் நடைபெறமாட்டாது. அன்று தொடக்கம் இன்று வரை வட பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை யாரும் மறந்து விடமுடியாது.

எமக்கெதிராக நடைபெறுகின்ற அநீதிகளை தொடரவிடாது, அவை சம்மந்தமாக சிந்தித்து ஒற்றுமையுடன் எமது கருத்துக்களை முன்வைக்க வேண்டும். சிறந்த முறையில் வட மாகாண சபை நடைபெறுகின்ற போது பல பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன்.

குறிப்பாக அரசியல் தீர்வை நாங்கள் முன்வைக்கும் போது வட மாகாணத்தில் நல்லாட்சி இருக்கும் என்று கருதுகின்றேன். தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தமிழ் பேசும் இனம் என்ற ரீதியில் ஒற்றுமையாக பலமாக இருக்க வேண்டும். இதனைச் சிதைக்காமல் எங்கள் உரிமைகளை வென்றெடுக்க முன்வர வேண்டும்” என்றார்.