தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: த.தே.ம.மு

tamil_nationalதமிழ் மக்களை தொடர்ந்தும் மரணபயத்தினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றது. அதனை தமிழ் ஊடகங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகின்ற பணியை துணிச்சலுடன் முன்னெடுக்க வேண்டும்’ என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

வலம்பரி பத்திரிகையின் செய்தியாளர் உதயராசா சாளின் (வயது 24), நீராவியடிப் பகுதியில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளினால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்ணனி விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘வலம்பரி பத்திரிகையின் செய்தியாளர் உதயராசா சாளின் (வயது 24) நீராவியடிப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆறு பேர் கொண்ட குழுவினால் வழிமறிக்கப்பட்டு கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார்.

குடாநாடு முழுவதும் இராணுவத்தினரது தீவிர கண்காணிப்பிலுள்ள நிலையில் இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதென்றால் இராணுவத்தினருக்குத் தெரியாது ஒருபோதும் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. காட்டுமிராண்டித்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான இத்தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஆத்துடன் கடந்த ஐனவரி மாதம் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளரான நா.பிரதீபன் மீதும், கடந்த மாதம் தினக்குரல் பத்திரிகையின் விநியோக முகாமையாளர் சிவகுருநாதன் சிவகுமார் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் காயப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் எடுத்துச் சென்ற பத்திரிகைகளும் எரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஐனநாயக விரோத சக்திகளால் மீண்டுமொரு ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை தொடர்ந்தும் மரண பயத்தினுள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றது. அதனை தமிழ் ஊடகங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருகின்ற பணியை துணிச்சலுடன் மேற்கொள்கின்றது.

அதனை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே தமிழ் ஊடகங்களை மௌனிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றது. இத் தாக்குதல்கள் கருத்துச் சுதந்திரத்தினையும், ஊடக சுதந்திரத்தினையும் கேலிக்கூத்தாக்குகின்றது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.