தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அறிக்கை தொடர்பாக நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் தமது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய அரசியல் சாசனம் ஒன்றிற்கான இடைக்கால அறிக்கை கடந்த 21.09.2017 அன்று பிரதம மந்திரி அவர்களால் பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையானது வழிநடத்தல் குழுவின் முழுமையான ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட அறிக்கையல்ல. இந்த வழிநடத்தல்குழு 73 தடவைகள் கூடி பேசியும்கூட என்னென்ன விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டது என்பது பற்றிய ஒருவிடயமும் குறிப்பிடப்படவில்லை.
பொதுவான சில விடயங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தாலும்கூட, இந்த கட்சிகள் இடைக்கால அறிக்கையில் ஏற்றுக்கொண்ட பலவிடயங்கள் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பின்னிணைப்புக்களில் மறுதலிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசன சபையில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்திட்டு ஒரு பின்னிணைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
அந்த பின்னிணைப்பில் வடக்கு-கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்றும் சமஷ்டி அரசியல் அமைப்புமுறை உருவாக்கப்படவேண்டும் என்ற தமிழ் மக்களுடைய அடிப்படையான விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வழிநடத்தல் குழு 73முறை கூடிப்பேசியும்கூட கூட்டமைப்பின் அடிப்படைக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே சம்பந்தனும் ஒரு பின்னிணைப்பைக் கொடுக்க வேண்டிய நிலை தோன்றியிருக்கிறது என்பதையும் நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆகவே இந்த இடைக்கால அறிக்கை என்பது புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கான அடிப்படை விடயங்களைக் கொண்டிருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு மேலாக 73 முறை விவாதிக்கப்பட்டு மக்கள் கருத்துக்களும் கேட்கப்பட்டு உபகுழுக்களின் அறிக்கைகளும் கையளிக்கப்பட்டு அதன் பின்னர் உருவாக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால அறிக்கையானது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாத பல்வேறுபட்ட பின்னிணைப்புக்களையும் கொண்ட ஒரு அறிக்கையாகவே வெளிவந்திருக்கிறது.
இந்த அறிக்கையில் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாடுகள் என்று எதனையும் பார்க்கமுடியவில்லை” என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.