தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் இலங்கை தமிழரசு கட்சியினர் வேண்டுகோள்

கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக நடாத்தவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்களை அழைக்கும் வகையில் இலங்கை தமிழரசு கட்சியினரால் யாழ். நகரில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் காரணமற்ற கைதுகளை, தடுத்து வைத்தலை கண்டித்தும் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியுமே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படவிருக்கின்றது.

யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை நடாத்த தமிழரசு கட்சிதீர்மானித்துள்ளது.

தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நடாத்தவுள்ள இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு இலங்கை தமிழரசு கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை தமிழரசுக்கட்சி / தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் இலங்கை தமிழரசுக்கடசியின் துணைப்பொதுச்செயலாளர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகியோர் கையொப்பமிட்ட துண்டுபிரசுரங்களே விநியோகிக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor