Ad Widget

தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பிலும் விசாரணை துவங்க வேண்டும் – பாரதி

உலகில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும் சூழல் தொடர்பான சிபிஜே- என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் இம்முறை அறிக்கையில் இலங்கை 6-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4-வது இடத்தில் இருந்தது.

இந்த ஆண்டு முதலிடத்தில் சோமாலியாவும் இரண்டாவது இடத்தில் இராக்கும் உள்ளன. சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கொள்ளமுடியாது என்றும் 2009-ம் ஆண்டில் போர் முடிந்த பின்னர் அங்கு எந்தவொரு ஊடகவியலாளரும் அவரது தொழிலுக்காக கொல்லப்படவில்லை என்பதற்காகவே 4-வது இடத்தில் இருந்த இலங்கை 6-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது என்றும் சிபிஜே கூறியுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் வழக்கு விசாரணைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன் கூறியிருந்தமையையும் சிபிஜே சுட்டிக்காட்டியிருக்கிறது.

கடந்த மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது இலங்கை ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தில் ஓரளவு முன்னேற்றம் தெரிவதாக இலங்கையின் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினரும் தினக்குரல் வார-இதழின் ஆசிரியருமான பாரதி ராஜநாயகம் தெரிவித்தார்.

ஆனால், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும் பாரதி ராஜநாயகம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

‘நிமலராஜன் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார், சிவராம் கொழும்பில் கொல்லப்பட்டார், நடேசன் மட்டக்களப்பில் கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் தொடர்பில் எந்த விதமான விசாரணைகளும் புதிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்படவில்லை என்பது உண்மை’ என்றார் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் பாரதி ராஜநாயகம்.

Related Posts