தமிழ் இளைஞர்களை நாட்டைவிட்டு விரட்டவே முன்னாள் போராளி சுட்டுக்கொலை!

மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.

SURESH_PREMACHANDR

நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“மன்னார், வெள்ளங்குளத்தில் கடந்த 12ஆம் திகதி கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது – 40) என்ற முன்னாள் பேராளியான இரு பிள்ளைகளின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டார். அரசிடம் புனர்வாழ்வு பெற்ற இவர், இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்டு வீட்டுக்காக கல் அரிந்து கொண்டிருக்கும் போதே இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இவரின் கிராமத்தைச் சுற்றி இராணுவ முகாம்களே உள்ளன. அரசுக்கு எதிராக சதிசெய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இவ்வருடம் ஏப்ரல் மாதம் மாதம் நெடுங்கேணியில் வைத்து 3 தமிழ் இளைஞர்களை இராணுவம் சுட்டுக்கொன்றதன் பின்னணியிலேயே இக்கொலையும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலையின் பின்னணியில் இரு காரணிகள் உள்ளன.

ஒன்று தமிழ் இளைஞர், யுவதிகளை இந்த நாட்டை விட்டு விரட்டுவது. யுத்தம் முடிந்த பின்னர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு படை எடுத்தமையும், இந்த சட்டவிரோத பயணத்தில் சில அமைச்சர்களும், கடற்படை அதிகாரிகளும் தொடர்புபட்டிருந்தனர் எனவும் தெரியவந்தது. இந்நிலையில் மீண்டும் தமிழர்களை நாட்டை விட்டு விரட்டும் ஒரு சதியாகவே இது உள்ளது. இதை ஆஸ்திரேலிய அரசும் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது காரணம், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் புலிகள் வந்துவிட்டார்கள் எனக் கூறி சிங்களவர்களின் வாக்குகளைக் தக்கவைப்பதற்கான – கவர்வதற்கான சதியாகவும் இது உள்ளது. அத்துடன், தமிழ் மக்களை அரசியலிலிருந்து ஒதுக்கிவைக்கும் திட்டமாகவும் இது உள்ளது.

இதேவேளை, 23 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல்போன ஒருவர் தற்போது அம்பாந்தோட்டையிலுள்ள முகாமொன்றில் இருப்பதாகக் கூறி அவரை அழைத்துச் செல்லுமாறு அம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் கடிதம் அனுப்பப்பட்டது. அவர் எப்படி காணாமல்போனார்? எங்கே எந்த முகாமில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்? என்று எந்தத் தகவலும் கிடையாது. ஒரு தூக்குத்தண்டனைக் கைதி கூட 10 வருடங்களின் பின்னர் பொது மன்னிப்பிலாவது விடுதலைசெய்யப்படுவார். ஆனால், 23 வருடங்களின் பின்னர் இவர் விடுவிக்கப்படகிறார். தமிழன் என்பதால்தான் இந்த இழிநிலையா? இப்படி இன்னும் எத்தனை பேர் உள்ளனர்? இந்த அரசு தமிழர்களை இப்படித்தான் நடத்துகின்றதா?” – என்றார்.