தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு நாளை புதுடில்லிக்கு பயணமாகிறது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு நாளை புதுடில்லி பயணமாகின்றது. இந்தக் குழு எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளது.

TNA-logo

கூட்டமைப்பின் குழு நாளை வியாழக்கிழமை மதியம் புதுடில்லி பயணமாகும் என்றும் சம்பந்தன் தலைமையிலான இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா ஆகியோர் அடங்குகின்றனர் என்றும் தெரிய வந்தது.

22,23 ஆம் திகதிகளில் புதுடில்லியில் தங்கியிருக்கும் இவர்கள் இந்திய ப.ஜ.க. அரசின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இந்த உயர்மட்டச் சந்திப்புக்களின்போது, 13 ஆவது திருத்தம், மாகாண சபை அதிகாரங்கள், இருநாட்டு மீனவர் விவகாரம், உள்நாட்டில் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் குறித்து கூட்டமைப்புப் பிரதிநிதிகள் எடுத்து விளக்குவர் என்று தெரிவிக்கப்பட்டது.