Ad Widget

த.தே. கூட்டமைப்பை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் டக்ளஸ்

dak-thevananthaaaமீன் மணக்கும், மீன் விற்ற பணம் மணக்காது என்பார்கள் மனித குலத்தையே சீரழிக்கும் வகையில் நடத்தப்படும் போதை வஸ்து தொழில் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு பணத்தில் தமது உல்லாச பயணங்களையும், சுயலாப அரசியலையும் நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது போதை வஸ்து பாவனைக்கு எதிராக பேசுகின்றனர் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எது உண்மை எது பொய் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக நான் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளின் முன்பாகவும், வட மாகாண ஆளுனரின் முன்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பகிரங்க விவாதம் நடத்த விரும்பி அவர்களை அழைக்கின்றேன் என நாடாளுமன்றில் நேற்று (21) உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

நாம் வெறுமனே அரசியல் உரிமைக்காக மட்டும் குரல் கொடுத்து உழைத்து வருபவர்கள் அல்ல. அரசியல, சமூக, பொருளாதார மாற்றங்களை உருவாக்கவும், கலை, கலாசார, பண்பாட்டுப் விழுமியங்களை பாதுகாக்கவுமே நாம் அன்றிலிருந்து குரல் கொடுத்து வருபவர்கள். அத்தோடு மனித குலத்தை, மக்கள் சமூகத்தை சீரழிக்கும் எந்த செயல்களையும் நாம் ஒரு போதும் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல.

போதைவஸ்து பாவனைக்கு நாம் என்றுமே எதிரானவர்கள்

மனித சமூகத்தையே சீரழிக்கும் போதைவஸ்து பாவனையை நாம் கொள்கை ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் எமது ஆரம்பகால உரிமைப் போராட்ட காலத்தில் இருந்தே எதிர்த்து வந்திருக்கின்றோம். நான் எமது மக்களின் சார்பாக அங்கம் வகித்து வரும் அரசாங்கம் போதைவஸ்து பாவனைக்கோ, அல்லது அதன் விற்பனைக்கோ ஒரு போதும் துணை போகாது என்பது எனது நம்பிக்கை.

போதை பொருளை எதிர்பது போல த.தே.கூ நாடகத்தை அரங்கேற்றுகின்றது

இங்கு விசித்திரமான விடயம் என்னவென்றால், போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட சிலரை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போதைவஸ்து வியாபாரத்தில் இருந்து கிடைக்கும் வெளிநாட்டு பணத்தில் சுயலாப அரசியல் நடத்திக்கொண்டு இன்று இந்த நாடாளுமன்றத்தில் போதைவஸ்தை எதிர்ப்பது போல் நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருகிறது.

தமிழ் பேசும் மக்களின் பெயரால் அரசியல் நடத்த வந்தவர்கள் சமூகத்தை சீரழிக்கும் வியாபாரங்களை நடத்துவதால்தான் அரசியல் தீர்விற்கான வாய்ப்புகள் கிடைத்தும் எமது பிரச்சினை தீர்வின்றி இழுபட்டுச் செல்கிறது. உலகெங்கும் நடந்து முடிந்த உரிமைப் போராட்டங்கள் யாவும் விடுதலை வெற்றியை பெற்றிருக்கின்றன. அல்லது, அரசியல் தீர்வின் திசை நோக்கி சென்று எதிர்பார்த்த உரிமைகளின் வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு மட்டும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை

ஆனாலும், இலங்கைத் தீவில் வாழுகின்ற தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் மட்டும், இன்று வரை அரசியல் தீர்விற்கான அரிய பல வாய்ப்புகள் கிடைத்திருந்தும், தீர்வின்றி இழுபட்டுச் செல்லும் துயரங்களே இங்கு தொடர்கின்றன. எமது உரிமைப்போராட்ட வரலாற்றிலும், உரிமையின் பெயரால் நடத்தி முடிக்கப்பட்ட அழிவு யுத்தத்திலும், விலை மதிக்க முடியாத மனித உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம்.

பல்வேறு இடப்பெயர்வுகளையும், சொத்திழப்புக்ளையும், சொந்த நிலங்களை பிரிந்து வாழும் அவலங்களையும் நாம் கண்டிருக்கின்றோம். ஆனாலும், அனைத்து அவலங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாக இருந்த அர்த்தமற்ற அழிவு யுத்தத்தை நிரந்தரமாகவே முடிவிற்குக் கொண்டு வந்து, அமைதி தரும் சூழலை உருவாக்கி, அந்த அமைதிச் சூழலில் இருந்து அரசியல் தீர்வு நோக்கி செல்லும் பாதை இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதிக்கு நன்றிகள்

இந்த அமைதி சூழலை உருவாக்கித் தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நான் இந்த சபையில் மீண்டும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு அழிவு யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர், இந்த சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக உரையாற்றியிருந்த அதன் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் அழிவு யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றி கூறி உரையாற்றியிருந்ததையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

கூட்டமைப்பினர் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்

போதை வஸ்து பாவனைக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகக் கூறி இந்த சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இறந்து போன மக்களுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இல்லை என்று நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார்கள்.

இதுவரை கால அழிவு யுத்தத்தின் போது பலியாகிப்போன எமது மக்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது, இன்னமும் அந்த இழப்பின் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வையும், நீடித்த மகிழ்ச்சியையும் உருவாக்கி கொடுப்பதேயாகும்.

அதற்காகவே பிறந்திருக்கும் இந்த அமைதிச் சூழலை எமது மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காகப் பயன்படுத்த எண்ணி நாம் நடை முறை யாதார்த்த வழி நின்று உறுதியுடன் உழைத்து வருகின்றோம்.

அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் கூட்டமைப்பு விருப்பமின்றி செயற்படுகின்றது

ஆனாலும், அழிவு யுத்தம் முடிவிற்குக் கொண்டுவந்திருப்பதை ஆதரிப்பதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறு புறத்தில் பலியாகிப்போன எமது மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களுக்கு மாற்றீடாக ஒர் அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதில் விருப்பமின்றி இருந்து வருகிறது.

இறந்து போன எமது மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையாகவே அஞ்சலி மரியாதை செலுத்த விரும்பியிருந்தால், எமது மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க அவர்கள் முன் வந்திருப்பார்கள்.

மீண்டுமொரு பொன்னான வாய்ப்பாக பிறந்திருக்கும் இந்த அமைதிச் சூழலை அரசியல் தீர்வுக்காக அவர்கள் பயன்படுத்த முன்வந்திருப்பார்கள்.
ஆனாலும் அவர்கள் முன்வரவில்லை. இது ஆச்சரியமான ஒன்றல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பங்கள் யாவும் அப்பாவி மக்களின் அழிவுகளும், அவலங்களுமே.

போதை வஸ்து பாவனையை கூட்டமைப்பு விரும்புகின்றது

போதை வஸ்து பாவனை கூட இங்கு இருக்க வேண்டும் என்பதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புகின்றது. ஏனெனில் கலாசார சீரழிவுகள் நடப்பதாகக் காரணம் காட்டி அதில் கூட தமது சுயலாப அரசியலை நடத்திடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கங்கணம் கட்டி நிற்கிறது.

எங்கே ஒரு அவலம் நடக்கின்றதோ, எங்கே ஒரு மனித உயிர் பலியாக்கப்படுகின்றதோ, எங்கே கலாசார சீரழிவுகள் நடப்பதாக கதைகள் கட்டி விடப்படுகின்றனவோ, அங்கே அதை வைத்து அழுவது போல் நடித்து, நீலிக்கண்ணீர் வடித்து, அந்த அவலங்களையும், இழப்புகளையும் கலாசார சீரழிவுகளையும் அரசியலாக்கி அதை அடுத்த தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்துவதே அவர்களது வரலாறு.

உயிர் பலியில் கூட்டமைப்பினர் மகிழ்ச்சியடைகின்றனர்

சவப்பெட்டிக்கடைகாரன் கூட சாவு நடக்கும் போது துயரப்படுவான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ மனித உயிர்கள் பலியாகிப்போனால் அதில் மகிழ்ச்சி கொண்டாடுகிறார்கள்.

இறந்து போன மக்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்துவது உண்மை என்றால், எமது மக்களை நேசித்த தமது தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், சறோஜினிதேவி யோகேஸ்வரன், பொன் மதிமுகராஜா, பொன் சிவபாலன், தோழர் பத்மநாபா, சிறி சபாரத்தினம் போன்றவர்களுக்கும் அஞ்சலி செலுத்த முன் வந்திருப்பார்கள்.

அஞ்சலி செலுத்துவது வெறும் பகல் வேஷம்

தமது தலைவர்களுக்கே உரிய முறையில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள், அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது போல் நடிப்பது வெறும் பகல் வேஷம்.

இறந்து போன மக்களை மனதில் நிறுத்தி அஞ்சலி செலுத்தாமல் அடுத்த தேர்தல் வெற்றியை மனதில் வைத்துக்கொண்டே இவர்கள் இந்த அஞ்சலி நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்.

போதை வஸ்து பாவனை நடப்பதாகவும், அதனால் சமூகம் சீரழிந்து போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. தமது சுயலாப அரசியலால்தான் அப்பாவி மக்கள் செத்தழிந்து போனார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? முள்ளி வாய்க்கால் அழிவுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசி வருவது வெறும் பொய் வேஷம்.

இணைந்து செயற்படும் கோரிக்கையை நிராகரித்தவர்கள் கூட்டமைப்பினர்

வன்னி மண்ணில் யுத்தம் நடப்பதற்கு முன்பாக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து, யுத்தம் தொடங்கினால் அழிவுகள் நடக்கப்போகின்றன, அவலங்கள் தொடரப்போகின்றன, அதை தடுப்பதற்கு வழியுண்டு வாருங்கள், இணைந்து செயற்படுவோம், எமது மக்களைக் காப்போம், என்று கேட்டிருந்தேன்.

ஆனாலும், தமிழ் பேசும் மக்கள் மீது எள்ளளவு இரக்கம் கூட காட்டாமல் எனது கோரிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தட்டிக்கழித்திருந்தார்கள்.

அதன் பின்னர், வன்னியில் அழிவு யுத்தம் தொடங்கிய போது எமது மக்களை அழிவுகளில் இருந்து பாதுகாக்க, அவர்களை யுத்தம் இல்லாத பிரதேசங்களுக்கு வருமாறு நாம் கேட்டிருந்தோம். அப்பாவி மக்களை யுத்த கேடயங்களாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், யுத்த பிரதேசங்களை விட்டு அப்பாவி மக்கள் வெளியேறி வர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், கோரிக்கைகளை முன்வைத்து மக்களை அணி திரட்டி நாம் மாபெரும் ஆர்ப்பாட்டங்களையே நடத்தியிருந்தோம்.

உலக நாடுகளில் உல்லாசம்

அப்போதும் 22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நாற்காலிகளை சூடேற்றி விட்டு, எமது மக்களை தமது போதை வார்த்தைகளால் அழியக்கொடுத்து விட்டு, தமது குடும்பங்களோடு, உறவுகளோடு தாம் மட்டும் தப்பிச்சென்று உலக நாடுகளில் உல்லாசம் நடத்திக்கொண்டிருந்தனர்.

எந்தவொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராவது யுத்தமற்ற பிரதேசத்தை நோக்கி எமது மக்கள் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கவில்லை. அன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வினோநோதாரலிங்கம் அவர்கள் லண்டனில் வைத்து கருத்து தெரிவித்திருந்த போது, தான் மட்டும் இது குறித்து குரல் கொடுத்திருந்ததாகவும், ஏனைய 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாய் மூடி அழிவுகளை பார்த்து இரசித்துக்கொண்டிருந்ததாகவும் கூறியிருந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

பலியாகிப்போன நம் உறவுகளுக்கு அஞ்சலி நடத்துவது தவறல்ல. அதை யாரும் தடுக்க முடியாது. ஆனாலும், பலியாகிப்போன எமது மக்களின் ஆத்மாக்களின் மீது ஏறி நின்று போதை ஏற்றும் சுயலாப அரசியல் நடத்துகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

போதை வஸ்து தொழில் மூலம் சுயலாப அரசியல்

மீன் மணக்கும், மீன் விற்ற பணம் மணக்காது என்பார்கள் மனித குலத்தையே சீரழிக்கும் வகையில் நடத்தப்படும் போதை வஸ்து தொழில் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு பணத்தில் தமது உல்லாச பயணங்களையும், சுயலாப அரசியலையும் நடத்தி வருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
அதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போதை வஸ்து பாவனைக்கு எதிராக பேசுகின்றார்கள்.

சாராயக்கடை முதலாளிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமூகம் சீரழிகின்றது என்று ஓலமிடுகின்றார்கள். நடந்து முடிந்த வட மாகாணசபை தேர்தலின் போது கிராமங்கள் தோறும் இளைஞர்களுக்கு மது பானம் வழங்கி, இளைஞர்களை சீரழித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது வாக்கு வேட்டைகளை நடத்தியதை எத்தனையோ பெற்றோர்கள் என்னிடம் வந்து முறையிட்டிருக்கிறார்கள்.

நீங்கள் திருந்திவிட்டால், சமூகம் தானாகவே திருந்தும்

இவர்கள்தான் இன்று போதை வஸ்து பாவனையால் கலாசாரம் சீரழிகிறது எனப் பேசி வருகிறார்கள் நீ நீயாகவே திருந்திவிட்டால், சமூகம் தானாகவே திருந்தும் என்பார்கள். மக்களை வழி நடத்தி செல்வதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் ஒழுக்க சீலர்களாக தாமே நடந்து காட்ட முன்வர வேண்டும். போதை வார்த்தைகளால் சர்வதேசத்தை காட்டி தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை அபகரித்து வருகிறது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

உலக மீட்பர்கள்

மீட்பவர்களாக நோர்வே வரும் என்றார்கள். அமெரிக்கா வரும் என்றார்கள். ஐரோப்பிய யூனியன் வரும் என்றார்கள், கனடா வரும் என்றார்கள்,நடந்து முடிந்த ஜெனீவா மாநாட்டை அடுத்து எல்லோருமே ஏமாற்றி விட்டதாக நீலிக்கண்ணீர் வடித்தார்கள்.

அயல் நட்பு நாடாகிய இந்தியா கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுயலாப அரசியலை புரிந்து கொண்டு தனது அதிருப்தியை காட்டத் தொடங்கியிருக்கிறது.

மோடிக்கு கடிதம்

கையிலே நெய்யை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவது போல், கிடைத்திருக்கும் மாகாணசபையை சரிவர நடத்த விரும்பாதவர்கள் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.

தென்னாபிரிக்காவே! தமிழ் பேசும் மக்களை மன்னித்துக்கொள்

இன்று, தென்னாபிரிக்காவை அழைக்கப்போவதாகக் கதை விடுகின்றார்கள். தென்னாபிரிக்காவே! தமிழ் பேசும் மக்களை மன்னித்துக்கொள் என்று நாங்கள் தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டியுள்ளது.

ஏனென்றால், தென்னாபிரிக்கா மீதும், அதன் சுதந்திர தலைவரான கறுப்பு சூரியன் நெல்சன் மண்டேலா மீதும் தமிழ் பேசும் மக்கள் அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறார்கள்.

சிறியது பெரியது என்று பேதம் பாராமல், அனைத்து கட்சிகளும், இணைந்து அனைத்து இன மக்களுக்குமான தீர்வை உருவாக்கி தலை நிமிர்ந்து நிற்கும் தேசம் தென்னாபிரிக்கா.

உரிமை கிடைக்க வேண்டும் என்றால் எதிரியுடனும் பேசு! என்றார் தலைவர் நெல்சன் மண்டேலா. இதே வழிமுறையைத்தான் இலங்கை விவகாரத்திலும் தென்னாபிரிக்கா கையாள விரும்பும்.

விளம்பரத்திற்காக வீரம் பேசும் கூட்டமைப்பினர்

தமது சொந்த சலுகைகளுக்காக மட்டும் பின் கதவு தட்டி அரசுடன் கூனிக்குறுகி பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விளம்பரத்திற்காக வெளியே மட்டும் வீரம் பேசிக்கொண்டு, அதே அரசுடன் பகைமை கொப்பளிக்க பேசி வருகிறது.

இந்த சபையில் போதைவஸ்துக்கு எதிராக பேச வந்திருக்கும் இவர்கள், போதைவஸ்தை விடவும் மோசமான போதை வார்த்தைகளோடு வந்திருக்கிறார்கள்.

போதைவஸ்தை விடவும், போதை வார்த்தைகள்தான் அதி மோசமானவை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கே வெளிச்சம். போதை ஏற்றும் வார்த்தைகளை உணர்ச்சி பொங்க பேசி வாக்குறுதிகளை போதைப்பொருளாக அள்ளி வழங்கி, தமிழ் பேசும் மக்களை தொடர்ந்தும் தமது வெற்று வீர மயக்கத்தில் வைத்திருக்கலாம் என்று கனவு காண்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

உரிமை கிடைக்க வேண்டும் என்றால் எதிரியுடனும் பேசு

உரிமை கிடைக்க வேண்டும் என்றால் எதிரியுடனும் பேசு! என்று மதிநுட்ப சிந்தனை வகுத்த தென்னாபிரிக்க நாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளி வேச தெருக்கூத்துக்களை ஒரு பேதும் விரும்பாது.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வந்தால் தாம் மட்டும் தனியாக பேச வேண்டும் என்ற தமது ஏகப்பிரதிநிதித்துவ கூச்சல் ஓய்ந்துவிடும் என்றும், பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்றும் அச்சப்படுகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய பேச்சு வார்த்தை மூலம் அரசியல் ஜனநாயக பன்முக சிந்தனையை வளர்த்திருக்கும் நாகரீக நாடான தென்னாபிரிக்கா, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் அநாகரீக அரசியலை ஒரு போதும் ஏற்காது.

ஆகவே, ஏனைய சர்வதேச நாடுகளை துணைக்கு அழைத்து பின்னர் அதே நாடுகள் தம்மை ஏமாற்றி விட்டதாக மக்களுக்கு கூறி, சர்வதேச நாடுகள் மீதான நம்பிக்கையை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தாமே வளர்த்து விட்டு, பின்னர் அதையே எமது மக்களின் மனங்களில் வெறுப்புணர்வுகளாக மாற்றி விட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

இன்று தென்னாபிரிக்காவை துணைக்கு அழைப்பவர்கள், தமது சுயலாப நாடகங்கள் அரங்கேற முடியவில்லை என்றதும், நாளை தென்னாபிரிக்காவும் ஏமாற்றி விட்டது என்று கூறி எமது மக்கள் மனங்களில் தென்னாபிரிக்கா குறித்த வெறுப்புணர்வுகளை வளர்க்கவே திட்டமிடுகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

ஆகவேதான் தமிழ் பேசும் மக்கள் சார்பாக நான் தென்னாபிரிக்காவே எங்களை மன்னித்து விடு என்று முன்கூட்டியே வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்.

ஆனாலும், இந்த சபையின் ஊடாக ஒன்றை மட்டும் நான் கூற விரும்புகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது போல் தென்னாபிரிக்கா எமது அரசியலுரிமை தீர்வு விடயத்தில் தலையிட முன்வந்தால் அதை நான் வரவேற்கத் தயாராகவே இருக்கின்றேன். இதேவேளை அதற்கான கால அவகாசத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

அதிகாரம் இல்லை என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் முயற்சி

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சகல அரசியல் அதிகாரங்களும் இருக்கின்றன. வடக்கு கிழக்கில் ஈ.பி.டி.பி யினராகிய எம்மிடம் இருக்கும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களை விட, ஏனைய 14 நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் யாழ் மாவட்டத்தில் எம்மிடம் இருக்கும் 4 உள்ளூராட்சி சபைகளை விட, ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறார்கள்.

அதை விட, எமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பான வட மாகாணசபை அதிகாரத்தை அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வைத்திருக்கிறார்கள்.

இத்தனை அதிகாரங்களையும் வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி முழுப்பூசணிக்காயை சோற்றில் புதைக்க முயற்சிக்கிறது.

மாகாணசபையை தாம் நடத்துவதற்கு மத்திய அரசும் ஆளுனரும் தடையாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யுரைத்து வருகிறது. உண்மையாகவே மாகாணசபையை செயற்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பமின்றி இருக்கின்றதா? அல்லது மத்திய அரசு மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு தடையாக இருக்கின்றதா?

இந்த கேள்விகளுக்கான விடையினை தமிழ் பேசும் மக்கள் மேலும் முழுமையாக அறிந்து கொள்வதற்காக, எது உண்மை எது பொய் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக நான் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளின் முன்பாகவும், வட மாகாண ஆளுனரின் முன்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பகிரங்க விவாதம் நடத்த விரும்பி அவர்களை அழைக்கின்றேன் என இவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts