தமிழர் அடையாளத்தை அழிக்க அரசு முயற்சி: நவநீதம்பிள்ளையிடம் விளக்குவோம் – மாவை

mavai mp inதமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாத அளவிற்கு அரசாங்கம் எங்களை அந்நியப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழர் என்ற அடையாளத்தை அழித்து விடவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச அலுவலகமும், தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அலுவலகமும் இன்று காலையில் சாவகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புதிய வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில், நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வழங்கப்பட்ட அரச நியமனங்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது.

எதிர்வரும் 30 திகதி இலங்கை வரவுள்ள நவநீதம்பிள்ளையிடம் எமது நிலைப்பாடுகள் தொடர்பாக விளக்கமாக எடுத்துரைக்கவுள்ளோம்.

இங்கு உரையாற்றிய மேல் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன்,

வட மாகாண சபைத் தேர்தலில் கள்ளர்கள் போட்டியிடுவதைத் தடுப்பதற்காகவே தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

´அரசாங்கத்துக்கு காவடி எடுத்துக்கொண்டு சிலர் தமிழருக்குத் தீர்வு தருவோம் என்று உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எவ்வாறும் தேர்தலில் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

சுசில் பிறேமஜயந்த இங்கு வந்து சொல்கிறார், வட மாகாணத்தில் வெற்றி பெறுவோம் என்று, ஆனால் கூட்டமைப்பு ஹம்பாந்தோட்டைக்குச் சென்று பிரசாரம் செய்கிறதா பாருங்கள். இது தமிழரைக் குழப்புகின்ற அரசின் எண்ணம்´ என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், ஸ்ரீதரன், அ.விநாயகமூர்த்தி மற்றும் பேராசிரியர் க.சிற்றம்பலம், வட மாகாணசபை வேட்பாளர் கேசவன் சயந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.