தமிழர்களை அடிமைப்படுத்தும் முயற்சிக்கு இடமளியோம்: சுரேஸ் எம்.பி

SURESH‘யாழ். குடா நாட்டில் காடைதனமான செயற்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த காடைத்தனத்தின் மூலம் தமிழ் மக்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது வாழ்வு போராட்டத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. இவ்வாறான அடிமைத்தனங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராட வேண்டும்’ என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தம் முடிந்து மூன்று வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் அகதி வாழ்வு வாழ்ந்து வருகின்றார்கள். இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அதனை செவிமடுக்காத அரசு, மீள்குடியேற்றம் இடம்பெறும் என்று பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றது’ என்று குறிப்பிட்டார்.

எமது வளமான விவசாய நிலங்கள் கடல் வளங்களை தொடர்ந்து தன்வசம் வைத்திருக்கவேண்டும் என்று இந்த அரசாங்கமும் இராணுவமும் நினைக்கின்றது. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அரசாங்கத்தின் அத்தகைய செயற்பாட்டுக்காக மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றின் அழுத்தங்கங்கள் காரணமாக வலிகாமம் வடகின் சில பகுதியில் அரசாங்கம் மீள்குடியேற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இவ்வாறான போராட்டங்கள் ஊடாக எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு சொல்லும் போது சர்வதேச நாடுகள் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தினைக் கொடுக்கும்’ என்றார்.

விமானத்தள விஸ்தரிப்புக்காக மக்களின் காணிகள் அபகரிப்பு செய்வதென்றால் மக்களின் அனுமதியைப் பெற்ற பின்னரே அது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறான செயற்பாட்டை நாங்கள் அனுமதிக்க முடியாது. 23 வருடங்களுக்கு மேலாக எமது கட்டுப்பாட்டில் உள்ளது என்று அரசும் இராணுவமும் சொல்லக் கூடாது’ என்றும் சுரேஸ் எம்.பி மேலும் குறிப்பிட்டார்.