பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் எந்தவகையிலும், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் செயல் அல்ல எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, பிரிகேடியருக்கு எதிராக விசாரணை நடத்தவோ, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுதந்திரத் தினத்தன்று, அதனை எதிர்த்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, லண்டனிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கழுத்தில் கையை வைத்து, அறுப்பதைப் போன்று சைகை காண்பித்தார்.
இச்சம்பவம் உலகளாவிய ரீதியில் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியதுடன், அவரை பணி இடைநிறுத்தம் செய்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
எனினும், குறித்த இடைநிறுத்தத்தை ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.