தமிழர்களின் தனிக்கலாச்சாரத்தை விழிப்புடன் பாதுகாப்போம்; விந்தன்

vinthan-kanakaraththinamசட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் தமிழர்களுக்கு என்று தனிக்கலாச்சாரம் உண்டு எனவே அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதன் போது யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் கலாச்சார சீர்கேடுகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு என்று தனிக் கலாச்சாரம் உண்டு. அதனைப் பாதுகாக்க எல்லோரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

சட்டத்தில் 18 வயதினைப் பூர்த்தி செய்து கொண்ட ஆண், பெண் இருவரும் தங்களுடைய விருப்பங்களுடன் வெளியிடங்களிலோ அல்லது விடுதிகளில் தங்கினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை.

எனினும் எமது கலாச்சாரத்தை நாம் மதிக்க வேண்டும். அதனை விடுத்து சட்டத்தின் அடிப்படையில் எமது கலாச்சாரத்தை தவறான முறையில் மாற்றக் கூடாது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக விடுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

அத்துடன் இதனை ஒரு தொழிலாக மேற்கொள்ள எமது கலாச்சாரத்தில் இடமில்லை. அத்துடன் யாழ்ப்பாணத்தில் குழு மோதல்கள், போதை வஸ்து பாவனை, மதுப்பாவனை அதிகரிப்பு, களவு, குற்றச்செயல்கள் மற்றும் தற்கொலை என்பன அதிகரித்து காணப்படுகின்றது. இவற்றை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

Related Posts