வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கல்வி, கலை, கலாசாரங்களை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கையில் பல்வேறு தீய சக்திகள் களம் இறங்கியுள்ளதால் இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். தமிழர்களிடம் எஞ்சியுள்ள கல்வியையும் உணர்வையும் அழிக்க முற்படும் சக்திகளுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டு புதுக்குடியிருப்பு கதிரவன் பாலர் பாடசாலையில் நடைபெற்ற விஜயதசமி நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
இன்று தமிழ் மக்களிடம் எஞ்சியுள்ள சொத்தாக கல்வியும் உணர்வுமே உள்ளது. இவ்விரண்டையும் திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கையில் பேரினவாதம் களம் இறங்கியுள்ளது.
தமிழ் இளைஞர், யுவதிகளின் சிந்தனைகளை கேளிக்கை நிகழ்வுகளூடாக திசை திருப்பி தமிழ் உணர்வை மழுங்கடிக்கச் செய்யும் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகின்றன.
பல்வேறு அழிவுகளைச் சந்தித்த தமிழினம் இங்கு தற்போதும் தலைநிமிர்ந்து துணிச்சலுடன் நடைபோடுகின்றது என்றால் அது கல்வி ஒன்றினாலாகும். முன்னர் அரச உயர் பதவிகளில் தமிழர்களே இருந்தார்கள் தமிழர்களிடம் இருந்து தான் சிங்களவர்கள் நிர்வாகத்திறனை கற்றுக் கொண்டார்கள். இன்று அரச உயர் பதவிகளில் தமிழர்களை காண்பது என்பது அரிதாகிவிட்டது. தொடர்ச்சியாக தமிழினத்தின் மீது நெருக்கடிகளை பிரயோகிப்பதன் மூலம் கல்வியில் கவனம் செலுத்தாத பின்தங்கிய சமூகமாக எம்மை வைத்திருப்பதற்கு சிங்களப் பேரினவாதம் முற்படுகின்றது. இதற்கு தமிழ் மக்கள் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.
தமிழ் இளைஞர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் வகையில் வடக்கு கிழக்கில் தாராளமாக கேளிக்கை நிகழ்வுகளும் வெளிநாட்டு கலாசாரங்களும் போதைவஸ்து, மதுபான விற்பனை என்பனவும் இடம்பெற்று வருகின்றன. இதனால் பல இளைஞர் யுவதிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்குச் சென்றுள்ளனர். பெற்றோர்கள் பிள்ளைகளை ஒழுக்கம் நிறைந்தவர்களாக வளர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.