தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பினர் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம், யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் பாராமுகமாக செயற்படுவதாக தெரிவித்த அவர்களது உறவினர்கள், தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக சுட்டிக்காட்டினர்.
பல வருட காலமாக விசாரணைகள் இன்றி வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதும், சிங்கள பிரதேசங்களுக்கு வழக்குகளை மாற்றுவதும் என அவர்களது பிரச்சினை இழுத்தடிக்கப்படுவதாக தெரிவித்த உறவினர்கள், இனியும் பொறுமை காக்காது அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.
அத்தோடு, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முகவரியிடப்பட்ட மகஜரொன்றை இலங்கை தமிழரசு கட்சி நிர்வாக செயலாளர் குலநாயகத்திடம் கையளித்தனர்.
இதேவேளை, சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு இப்பிரச்சினைக்கான தீர்வுடன், உண்ணாவிரத போராட்டத்தை முடிவுறுத்தாத பட்சத்தில் மீண்டும் பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.
வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணையில் இருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய அண்மையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சம்பந்தப்பட்ட கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, இவர்களுள் இருவர் ஏற்கனவே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.