தனியார் காணிகளை கையளிக்கவும், யாழ். தளபதியிடம் டக்ளஸ்

daklas-uthaya-pereraaaவலிகாமம் வடக்கில் இராணுவ வசமுள்ள தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். கட்டளைத் தளபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்று கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.தவராசாவினால் உறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாவற்குழி, கைதடி, நுணாவில் ஆகிய பிரதேசங்களில் இருந்த இராணுவ முகாம்களும், செம்மணியில் அமைந்திருந்த இராணுவக் காவலரனும், வலி வடக்கில் வலித்தூண்டல் பகுதியில் நீண்டகாலமாக அமைந்திருந்த இரண்டு இராணுவ முகாம்களும், தெல்லிப்பளையில் அம்பன் பகுதியில் வீடொன்றில் அமைந்திருந்த இராணுவ முகாமும் கட்டளைத் தளபதி உதய பெரேராவின் உத்தரவுக்கமைய அகற்றப்பட்டதற்கும் அமைச்சர் இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் குருநகரில் இருந்து பண்ணை வரை அமைந்திருக்கும் கரையோரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் அமைந்திருக்கும் இராணுவ நிலைகளையும் அகற்றி பொதுமக்களின் பாவனைக்கு விடுமாறும் அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைச்சரின் கோரிக்கைகளை செவிமடுத்த யாழ். கட்டளைத் தளபதி, ‘வலி வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தனியார் காணிகளை கட்டம் கட்டமாக கையளிப்பது தொடர்பாக தான் பரிசீலனை செய்வதாகவும் குருநகர், யாழ். பண்ணை கடற்கரையோரமாக அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பாகவும், தான் சாதகமாக பரிசீலிப்பதாகவும்’ உறுதியளித்தார்.

என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.