Ad Widget

தனிச்சிங்கள நாட்டை உருவாக்க முயற்சித்தால் அது தமிழீழம் உருவாகவே வழிசமைக்கும்!

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றாமல் தனிச் சிங்கள நாட்டை உருவாக்க நினைத்தால் தமிழர் தேசத்தில் தமிழீழம் என்ற தனி இராஜ்ஜியம் உருவாக அது வழிசமைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு இன்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைக்கு கலப்பு நீதிமன்றம் தீர்வாக அமையும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இறுதிக்கட்ட போரில் குற்றம் இழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேசம் ஏற்றுக்கொண்டிருப்பது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்ட அவர், உண்மையை வெளிக்கொணர்தல் மற்றும் போருக்கு முன்னரும் அதன் பின்னரும் இடம்பெற்ற சட்டமீறல்கள் தொடர்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படுகின்றபோது புதிய விசாரணைப் பொறிமுறை உருவாகும் நிலைமை ஏற்படும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பலர் கலப்பு நீதிமன்றம் என்ற வார்த்தையை தவிர்த்து உள்ளகப்பொறிமுறை விசாரணை என பேசி வருகின்றனர். அதற்கு அரசாங்கமும் உடன்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் நம்பக்கூடிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர், மக்கள் நம்பும் பட்சத்தில் மாத்திரம் தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு அதுதொடர்பில் பேசமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts