நீதியமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கிம், தந்தை செல்வாவின் சதுக்கத்திற்கு வருகை தருவது தவறு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்தின் அரசியல் விவகாரப் பொருப்பாளருமான சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.
தந்தை செல்வாவின் 36ஆவது நினைவு தினம் இன்று யாழ். பொது நூலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சதுக்கத்தில் நடைபெற்றது.
இதன்போது தமிழர் விடுதலை இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அதனை தொடர்ந்து ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதியின் பிரதிநிதியாகவும் அமைச்சரவையின் பங்காளியாகவும் இருக்கும் ரவூப் ஹக்கிமை இங்கு அழைத்திருப்பது தவறென்றும், அமைச்சர் ரவூப் ஹக்கிமுகு எதிராகவோ, தனிப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிராகவோ, அல்லது முஸ்லிம் தலைவர்களுக்கு எதிரான கருத்து இது அல்ல என்று அவர் கூறினார்.
அத்துடன், இனப்படுகொலை செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியை இங்கு அழைத்தது தவறு. இதேபோன்று ஜெனரல் சரத் பொன்சேகா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, றிசாத் பதியூதின், கருணா போன்றவர்களையும் இங்கு அழைத்திருக்க வேண்டும் என்று தந்தை செல்வாவின் அறங்காவலர் குழுவினரிடம் அவர் கேட்டு கொண்டார்.
ஏனென்றால் தந்தை செல்வாவின் போராட்டம் புனிதமானது. அவர் முஸ்லிம் மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர். ரவூப் ஹக்கிம் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர். நான் அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். எனினும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இருக்கிற அமைச்சரவையின் பங்காளியாக இருப்பவரை இப் புனித பூமிக்கு பிரதிநிதியாக அழைத்திருப்பது என்பது தவறென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.