தடைசெய்யப்பட்ட பால்மாக்கள் பதுக்கி வைத்திருந்தால் தண்டனை

Anchor_Instant_Full_Cream_Milk_Powderரசாயன பதார்த்தம் உள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய 4 வகையான பால்மா வகைகளும் சந்தையிலிருந்து முற்றாக அகற்றப்பட்டு விட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட 4 வகையான பால்மா வகைகளையும் விற்பனைக்காக வைத்திருக்கும் வர்த்தகர்களுக்கும்- சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டு வைத்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யூ. ரோஹன தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட 4 வகையான பால்மா வகைகளைத் தவிர தற்போது சந்தையிலுள்ள ஏனைய பால்மா வகைகளிலும் இரசாயன பதார்த்தம் அல்லது வே புரோட்டீன் வகை உள்ளனவா? என்பதை கண்டறிய மாதிரிகள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தவிர இறக்குமதி செய்யப்பட்டு தற்போது துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பால்மா வகைகளினதும் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே அவை சந்தைக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அங்கர் வன்பிளஸ் மற்றும் அங்கர் முழு ஆடை பால்மா Batch No 0605C0883 11:21 மெலிபன் ஆடை நீக்கிய பால்மா Batch No 130744 A+1 பால்மா Batch No NWIFPDXI என்ற பால்மா வகைகளே தற்போது தடைசெய்யப்பட்டுள்ளன.

நுகர்வோர் மேற்குறித்த Bacth இலக்க பால் மா வகைகள் வாங்குவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.