தடைகள் வந்தாலும் ஜனநாயகத்தினை நிலைநாட்ட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

tna_media02ஆயுத குழுக்கள் மக்களை தேர்தலில் வாக்களிக்க முடியாதவாறு தடுக்கும் சந்தர்ப்பம் வந்தாலும், அவற்றினை தாண்டி மக்கள் ஜனநாயகத்தினை நிலைநாட்ட வேண்டும்’ என முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில், நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘வடமாகாணம் தற்போது வடமாகாண ஆணையில் பிரதிபலிக்கின்றது. அத்துடன், ஆளுநரின் ஆணையை விட சில அரசியல்வாதிகளின் ஆணைகளும் செயற்படுத்தப்படுகின்றன. சில அரசாங்க உத்தியோகத்தர்கள் சட்டத்தின் படி செயற்படுவதற்கு இடையூறாக அவை அமைகின்றது.

அப்படியான சூழலிலேயே அரசாங்கம் இப்படியான ஒரு தேர்தலை நடத்த முன்வந்தது. தலைவர் அவர்கள் கூறியது போல் வெளிநாட்டு அழுத்தத்தின் காரணமாகவே இப்படியானதொரு தேர்தல். இல்லையேல் இன்று வடமாகாண சபை தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கு சாத்தியமில்லை.

வெளிநாட்டின் நெருக்குதலின் காரணமாகவே வடமாகாண சபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், நான் நீதிமன்றில் இருந்தபோது அறிந்து கொண்ட விடயங்களை தெரிவிக்க விரும்புகின்றேன்.

முன்னர் மக்கள் வாக்களிக்க செல்லும் போது, சிலர் மக்களின் வாக்காளர் அட்டைகளையும், அடையாள அட்டைகளையும் எடுத்துக் கொள்வார்கள். வாக்களிக்க முடியாமல் போய்விடும், இப்படி எத்தனையோ விதமான சூழல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.

அந்த சூழல் காரணமாக மக்கள் தமது ஜனநாயக வாக்கினை அளிப்பதற்கு தடையாக இருக்க கூடும். இவை எல்லாம் தாண்டி
எமது மக்கள் தமது ஜனநாயக உரித்தை நிலை நாட்ட வேண்டும்.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றால் இது மக்களின் ஆணையாக அதிகரிக்கும். இதுவரை காலமும் ஆயுத குழுக்கள் தமது பலாத்காரத்தின் நிமித்தம் தங்களின் ஆட்சியை வைத்திருந்தார்கள்.

ஆனால், இந்த முறை எமது மக்களின் ஆணையாக வாக்கின் பிரதிபலிப்பாக ஏற்பட போகும் ஒரு ஆட்சியை நாங்கள் நிலைநிறுத்தப் போகின்றோம் என்றால், அது உலகம் செவிசாய்க்கும், செவிசாய்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அரசாங்கம் கூட அதற்கு செவிசாய்க்க வேண்டியிருக்கும். எனவே, இதுவரை காலமும் எமது தமிழ் மக்களின் உரித்துக்களை பாதுகாத்து வந்த கூட்டமைப்பிற்கு எத்தனை அபேட்சகர்களை முன்வைக்க முடியுமோ, அவர்களை தேர்ந்தெடுக்க முடியுமோ, அத்தனை பேரையும் தெரிவு செய்ய வேண்டுமென்பதை கேட்டுக் கொள்கின்றேன்’ என்றார்.

Related Posts