Ad Widget

தடுப்புக் காவலிலுள்ள தமிழ் இளைஞர்களை விடுவியுங்கள்! – நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் தொடர்பான விடயத்தை சட்டரீதியாக மட்டுமே பாராது, நடைமுறைக்கு சாத்தியமான ரீதியிலும் கவனத்திலெடுத்து அவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கத்தை கொலைசெய்த கொலையாளி உள்ளடங்கலாக இலங்கையில் பாரதூரமான குற்றங்களைப் புரிந்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று வாழும் குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற குற்றவியல் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

சீனா, பொதுநலவாய நாடு அல்ல. எனவே, அந்த நாட்டுடனான பரஸ்பர நடவடிக் கைகளுக்காகவே இந்த ஏற்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஆனால், இதனூடாக எத்தகைய குற்றங்கள் தொடர்பில் சீனாவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. அதேவேளை, பொதுநலவாய நாடுகளுடனும் இந்த மாதிரியான நடவடிக்கைகளுக்குரிய ஏற்பாடுகளும் முழுமையாகவில்லை.

முன்னைய அரசின் காலத்தில் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடினார்கள். இவ்வாறு தப்பிச்சென்ற குற்றவாளிகளுள் சிலர் மேற்குலக நாடுகளில் வாழ்கின்றனர். இவர்களை கைதுசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த ஏற்பாடுகள் ஏற்புடையனவா என்று தெரியவில்லை.

எமது முன்னாள் எம்.பியான ஜோசப் பரராஜசிங்கத்தை போகவேண்டாம் என சொன்னேன். கிறிஸ்மஸ் தினம் என்பதால் அவர் போனார். கிறிஸ்மஸ் தினத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரைத் துப்பாக்கியால் சுட்டவரின் பெயரை நாம் கடந்த அரசின் உயர்மட்டத்துக்கு வழங்கினோம். ஆனால், குற்றவாளியை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அவர் நாட்டைவிட்டுத் தப்பிச்சென்று வெளிநாட்டில் வாழ்ந்துவருகிறார். இவ்வாறு பல குற்றவாளிகள் நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இவர்களைக் கைதுசெய்து நாட்டுக்குக் கொண்டுவர அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் யாவை? போர் முடிவடைந்து ஏழு வருடங்களாகப் போகின்றன. ஆனால், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களில் பலர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

இன்னும் சிறைகளில் வாடுகின்றனர். ஐ.நா. தீர்மானத்திலும், சர்வதேச சமூகத்தின் அறிக்கைகளிலும் இவை பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே, இளைஞர்கள் தடுப்புக்காவலில வைக்கப்பட்டுள்ளதை சட்டரீதியாக மட்டும் பாராது நடைமுறை சாத்தியமான ரீதியிலும் பார்த்து நீதி அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன். குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கும் அந்த இளைஞர்களை விடுதலைசெய்து சமூகத்துடன் இணைக்கவேண்டும்” – என்றார்.

Related Posts