தகைமையற்ற தறுதலைகளை ஆசிரியர்களாக்குவதைக் தவிர்ப்போமாக – முதலமைச்சர்

போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளைப் பார்த்தால் அது எம்மை நில் கவனி செல் என வழிகாட்டுகிறது. அதுபோல இது வரை ஓடிக்கொண்டிருக்கும் எமது கல்வி சம்பந்தமான ஒழுங்கு முறையை நின்று அவதானித்து புதிய உத்வேகத்துடன் முன்னேறிச் செல்ல எங்கள் மாகாணம் முன்வந்துள்ளது என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

Vickneswaran-vicky

இன்று காலை இராஜேஸ்வரி மண்டபத்தில் ஆரம்பமான வடமாகாண கல்வி முறைமை தொடர்பான மீளாய்வு செயலமர்வின் போது இதனைத் தெரிவித்தார்.

இது வரை நாம் பின்பற்றி வந்த கொள்கைகள் இலக்குகள் மற்றும் அவற்றில் காணப்படும் குறைகள் குற்றங்கள் தொடர்பாக அலசி ஆராய இது ஒரு சிறந்த சந்தப்பமாக அமைகிறது. அதே நேரம் எமது கடந்த காலத்தை ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்வதற்கான களமாக அதனைப் பயன்படுத்தவேண்டும்.

நாட்டுக்கு ஒரு முழுமையான இணைந்த கல்வி அமைப்பு இருப்பது அவசியம். ஆனால் எமக்கென வட மாகாண தமிழ் பேசும் மக்களுக்கென தனித்துவமான கல்வி அமைப்பு உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதை மத்திய அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். எமது எண்ணங்களையும் எமது பாரம்பரியங்கள் நோக்கங்களையும் புரியாமல் அறியாமல் கல்வி சம்பந்தமான ஆவணங்களைத் தயாரிப்பது ஏமாற்றத்தையே அழிக்கும்.

ஓரிரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் மனித இனம் பேசி வந்த மொழி தமிழ் என்றார். அதனை இந்தியாவிலும் இலங்கையிலும் இருந்தோரே முதலில் பேசத் தொடங்கினார்கள் என குறிப்பிட்டுள்ளார். பின்னர் அது பல நாடுகளுக்கும் பரவியது. ஆகவே வட மற்றும் கிழக்க மாகாணங்கள் அவற்றின் தனித் தன்மையையும் தொன்மையையும் தென் பகுதி மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

எம்மைக் குறிப்பிட்ட பெரும்பான்மை வட்டத்தினுள் இழுத்துவிடாதீர்கள் என்பதற்காகவே கல்விக் கொள்ளையாளர்களுக்கு நான் இதனைத் தெரிவிக்கிறேன். எமது தனித்துவத்தை தயவுசெய்து மதியுங்கள். பல்வேறு இனங்களிடையே புரிந்துணர்வும் மதிப்பும் எழுந்தால் எமது பிரச்சினைகள் தானாகவே தீர்ந்துவிடும்.

அன்று தொடக்கம் தொடரும் குரு சிஷ்ய பரம்பரைக் கல்வியை இன்று தனியார் கல்வி நிலையங்கள் நடத்துவது மனவருத்தத்துக்குரியது. பரீட்சைக்கு மாணவ மாணவியரை தயார் படுத்த மட்டுமே இந்த நிலையங்கள் உதவுகின்றன.

எமது ஆசிரியர்களும் அதேபோலதான் பரீட்சைக்கு தயார் படுத்துவது தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் போல காணப்படுகின்றனர். இதனால் மாணவ மாணவியரின் போக்குகள் வாழும் முறைகள் என்பன மாற்றமடைகின்றன. வெறும் கேள்வி பதில் என்ற வட்டத்துக்கப்பால் செல்ல முடியாதவர்களாக உருவாகின்றனர். பரீட்சைகளில் சித்தியடையவேண்டியது அவசியம் ஆனால் வாழ்க்கைக்கு தயார் படுத்தும் கல்வி மிக முக்கியமானது. இது தொடர்பாக கல்வியாளர்கள் சிந்திக்கவேண்டும்.

இன்று எமது பெற்றோரின் நோக்கம் மாணவ மாணவியர் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பதுதான். இன்று பெற்றோர்கள் அன்றைய காலம் போல ஒழுக்க விழுமியங்களைக் கற்பிப்பதில்லை. பரீட்சையில் அடி தவறினால் பெற்றோருக்கும் மாணவருக்கும் வாழ்க்கையில் இடி விழுந்தது போலாகிறது.

இன்று கல்வி இனாமாகக் கிடைக்கிறது. எல்லாத்தையும் இனாமாகப் பெற எண்ணுகிறோம். இங்கு இனாமாககப் பெற்ற கல்வியை வெளிநாடுகளில் சென்று உழைப்பதே இன்றைய இளைஞர்களது நோக்காகும். வெளிநாடுகள் போல தமது கல்விக்காக தம்மையே வருத்தி வாழ்கின்ற நிலமை வரும் போது மாணவர்களிடையே தன்னம்பிக்கை தானாக வளர்கிறது.

பல தொழில் திறமைகளை வளர்க்கவேண்டும். பல் தொழில்களில் பயிற்சி பெறவேண்டிய அவசியம் உள்ளது. எனவே வருங்காலம் பொருளாதார விருத்தியை மையமாகக் கொண்டு உருவாகவேண்டும். அதனை மையமாகக் கொண்டு கல்வி உருவாக்கப்படவேண்டும்.

போர்க்கால வாழ்வை வலியுறுத்த இன்றும் வீதியெங்கும் இராணுவம் வியாபித்துள்ளது. அப்படியிருந்தும் நாம் எமது தொழிற்கல்வியில் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது. நாம் தொழில்களுக்கு மதிப்பு கொடுக்க முன்வந்தால் எமது மாணவர்கள் தொழிற்கல்வியை நாடிச்செல்வார்கள். இதற்கு எம் சிந்தனைகள் மாறவேண்டும்.

தகைமையற்ற ஒருவனை ஆசிரியரை நியமிப்பதால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதிலொன்றுதான் இன்றைய மாணவ சமூதாயத்துக்கு ஆசிரியர்கள் மேல் ஏற்பட்டிருக்கும் மதிப்பற்ற தன்மை. தகைமையற்ற தறுதலைகளை ஆசிரியர்களாக்குவதைக் தவிர்ப்போமாக. தகுதியற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயத்தை உருவாக்குகிறது என்றார்.

வடமாகாணத்தில் ஒரு கல்வியை வளர்ச்சியை ஏற்படுத்த இந்த பணிக்கூடம் ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.

Related Posts