டெங்கு நுளம்புகளுக்கு இடங்கொடுத்தவர்களுக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். பொலிஸார், சனிக்கிழமை (15) தெரிவித்தனர்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரிகள், நல்லூர் பிரதேச சபையினருடன் யாழ். பொலிஸாரும் இணைந்து நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே 124 கிராமசேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை சனிக்கிழமை (15) மேற்கொண்டிருந்தனர்.

இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், டெங்கு பரவக்கூடிய சூழலினை வைத்திருந்த பலர் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன், தீவிரமாக டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில், சுற்றாடலை வைத்திருந்த மேற்படி 10 பேருக்கு எதிராக எதிர்வரும் 20ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

தற்போது மழை காலமாகையால் டெங்கு பரவும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதனை தடுக்கும் வகையில் வீட்டு, கட்டிட உரிமையாளர்கள் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சிரட்டை, இளநீர், பொலித்தீன் பைகளை அகற்றி ஒத்துழைக்குமாறு பொலிஸார் யாழ்ப்பாண பொதுமக்களை கேட்டுள்ளனர்.