டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரி மாணவர்களுக்கான மாதாந்த புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு பிரதமர் அறிவுறுத்தல்

டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரியின் மாணவர்களுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் மாதாந்த புலமைப்பரிசில் நிதியை 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று 2020.10.13 அறிவுறுத்தியுள்ளார்.

டவர் மண்டப அரங்க அறக்கட்டளையின் 296ஆவது நிர்வாக சபை குழுக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக டவர் மண்டப நாடக மற்றும் அரங்கியல் கல்லூரியில் ஆண்டுதோறும் சிறந்த திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் பணப் பரிசை, ரூபாய் 10 ஆயிரமாக அதிகரிப்பதற்கும் பிரதமர் அறிவுறுத்தினார்.

அது தொடர்பான முன்மொழிவுகளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க முன்வைத்தார்.

டவர் மண்டப அறக்கட்டளையின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி டக்ளஸ் சிறிவர்தன அவர்கள் குறித்த முன்மொழிவுகளுக்கான பத்திரத்தை முன்வைத்து, தூரப் பிரதேசங்களிலிருந்து வருகைத் தருகின்ற நாடக மற்றும் அரங்கியல் கல்லூரியின் மாணவர்கள் கடந்த காலங்களில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அத்துறைசார்ந்த பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தினால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் வீடுகள், பிற்பட்ட காலங்களில் விற்பனை செய்யப்படுவதால் கலாபுர போன்ற இடங்களின் முக்கியத்துவம் குறைந்து வருவதாக தெரிவித்த பிரதமர், அவ்வாறு அரசாங்கத்தினால் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் விற்பனை செய்யப்படின், அவற்றை மீண்டும் அரசாங்கத்திற்கு கையகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் குறிப்பிட்டார்.

அதற்கு மேலதிகமாக கலாபுர-வில் இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தில் கலைஞர்களுக்கான வீட்டுத் திட்டமொன்றை நிர்மாணிக்க முடியும் என பிரதமரின் செயலாளர் காமினி செனரத் சுட்டிக்காட்டியதுடன், அதற்கான ஆய்வுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் தெரிவித்தார்.

அநுராதபுரம், நுவரெலியா, மொனராகலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் கலைஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட விடுமுறை ஓய்வு விடுதியொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்வதற்கான நடவடிக்கை தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோருக்கு அறிவித்தார்.

டவர் மண்டப அரங்க அறக்கட்டளை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தின் பரஸ்பர புரிந்துணர்வின் கீழ் கற்கைநெறிகள் மற்றும் நாடக விழாவை நடத்துவதற்கான பிரதமரின் அனுமதி இதன்போது கிடைத்தது.

நாடக மற்றும் அரங்கியல் கல்லூரியில் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தி, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடகக் கலை தொடர்பில் வெளிநாட்டு புலமைப்பரிசில்களை வழங்கக்கூடிய விசேட கற்கைநெறிகள் கற்பிக்கப்படும் நாடுகள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு புலமைப்பரிசில்களை பெற்றுக்கொடுக்கவும் இந்த கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

கலைஞர்களுக்கு வழங்கப்படும் விபத்து காப்புறுதி வழங்கலின்போது, மேடை நாடக கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி, முதல் கட்டமாக நிதி வழங்களை ஆரம்பிப்பதற்கு இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிக்கார, டவர் மண்டப அறக்கட்டளையின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி டக்ளஸ் சிறிவர்தன, நிர்வாக மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் நிபுன திசாநாயக்க, பதில் கலாசார பணிப்பாளர் தரணி அனோஜா கமகே, நிதி அமைச்சின் பிரதி பணிப்பாளர் குலோஜா பீரிஸ், டவர் மண்டப அறக்கட்டளையின் பணிப்பாளர் குழு உறுப்பினர்களான சரிதா பிரியதர்ஷினி பீரிஸ், ஹஷீம் ஓமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor