ஜனாதிபதி முன்னிலையில் சி.வி. மீண்டும் சத்தியப்பிரமாணம்

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

mahintha-viknewswaran

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வாரம் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையிலேயே தமக்கு பொறுப்பான அமைச்சுக்களுக்காக வட மாகாண முதலமைச்சர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமாகாண முதலமைச்சரின் கீழ் வடமாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல் மற்றும் விநியோகம் ஆகிய அமைச்சுகள் உள்ளடங்கும்.

இதேவேளை, வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் ஏழு பேரும் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

ஜனாதிபதி மஹிந்த முன்னிலையில் சிவி இன்று மீண்டும் சத்தியப்பிரமாணம்!