Ad Widget

ஜனாதிபதி மற்றும் ஆளுனர் முன்னிலையில் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்பு(காணொளி)

வடமாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அலரிமாளிகையில் சற்றுமுன்னர் இச் சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

MR10072013V_1

சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், அ.விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் பங்கேற்றிருந்ததுடன், அரச தரப்பில் வட மாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா, அஸ்வர் ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.சி.வி விக்னேஸ்வரன் அவர்களுடன் 15ற்கும் மேற்பட்ட அவரது குடும்ப அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னர் தெரிவித்த கருத்துக்கு முரணாக மகிந்த முன்னிலையில் பதவி ஏற்பதற்கு மக்கள் மத்தியில் எதிர்பலைகள் கிளம்பியிருந்தபோதிலும் இந்த பதவியேற்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

பதவியேற்றபின் Colombo Telegraph இணையத்தளத்திற்கு கருத்துத்தெரிவித்த அவர் ” இந்த பதவி மக்களால் எனக்கு வழங்கப்பட்ட பரிசு.எனதுகடமைகளை செய்வதற்காக அவர்களால் வழங்கப்பட்ட ஆணை என்றும் குறிப்பிட்டார். தமது முதல் நடவடிக்கை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வு என்று சாரப்படவும் கருத்து தெரிவித்தார்

அதேவேளை சிங்கள சகோதர மக்களுக்கு ஒரு வேண்டுகோளையும் முன்வைத்தார் அதில் ” தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைகளை வழங்குதல் ஐக்கிய இலங்கையினை ஒருபோதும் பாதிக்காது என்பதை தாம் சார்ந்த அரசியல் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்

கடந்தமாதம் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், யாழ்.மாவட்டத்தில் 132,255 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட, சி.வி. விக்னேஸ்வரன் பற்றிய சில குறிப்புகள் –

*கொழும்பு புதுக்கடையில் ஒக்டோபர் 23, 1939ம் நாள் பிறந்தார் விக்னேஸ்வரன்.

*இவரது தந்தை, கனகசபாபதி விசுவலிங்கம், தாய் ஆதிநாயகி, இருவரும் மானிப்பாயில் பிறந்தவர்கள்.

*இரு சகோதரிகளுடன் பிறந்த விக்னேஸ்வரனின் பேரன், சேர் பொன்.இராமநாதன், சேர்பொன். அருணாசலம் ஆகியோரின் மைத்துனராவார்.

*இவரது தந்தை ஒரு அரச ஊழியராகப் பணியாற்றியதால், பல்வேறு மாவட்டங்களிலும் தனது சிறுபராயத்தைக் கழித்தார் விக்னேஸ்வரன்.

*ஆரம்பக் கல்வியை குருநாகல் கிறிஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப கன்னியர் மடப் பாடசாலையிலும் பயின்றார்.

*11வது வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர்கல்வி பெற்றார் விக்னேஸ்வரன்.

*லண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், அதையடுத்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார்.

*கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சட்டவாளரானார்.

*1962இல் சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

*1979 மே 07ம் நாள் நீதித்துறையில் இணைந்த இவர், ஆரம்பத்தில் மட்டக்களப்பு, சாவகச்சேரி, மல்லாகம் ஆகிய நீதிமன்றங்களில் நீதிவானாகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றினார்.

*1987ல் ஜனவரியில் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்ற விக்னேஸ்வரன், 1988ம் ஆண்டில் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

*வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் மேல் மாகாண மேல்நீதிமன்றங்களில் இவர் மேல்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

*1995ம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்ட விக்னேஸ்வரன், 2001 மார்ச் மாதம் உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

*உயர்நீதிமன்ற நீதியரசராக தமிழ்மொழியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொண்ட விக்னேஸ்வரன், அந்த விழாவில் தமிழர்கள் சிறிலங்காவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து ஆற்றிய உரை முக்கியமானதாகும்.

*2004ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம், ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், 2013 செப்ரெம்பர், 21ம் நாள் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

*யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட இவருக்கு, 132,255 விருப்பு கிடைத்தன. இது சிறிலங்காவில் நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழர் ஒருவர்பெற்ற அதிகளவு விருப்பு வாக்குகளாகும்.

Related Posts