ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியயாக த.தே. கூட்டமைப்பு – பா.அரியநேத்திரன்

“ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறப்போகின்றது என்ற பயம் அரசை ஆட்டத்தொடங்கியுள்ளது. அதன் காரணமாக இப்போதே பணத்தைக் கொடுத்து பல ‘சுப்பர் ஸ்ரார்களை’ இறக்கியிருக்கின்றது அரசு.”

p-aruyaneththeran-tna

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்களும் ஒரு தேசிய இனமாக வாழவேண்டுமாக இருந்தால் எமது நிலத்தை நாம் முதலில் பாதுகாக்க வேண்டும். அதை பாதுகாத்தால்தான் சர்வதேசத்திடம் சென்று நாங்களும் இந்த நாட்டின் பிரஜைகள் எங்களுக்கான தீர்வையும் தாருங்கள் என்று கேட்கமுடியும்.

அதற்காக வேண்டி எமது மண்ணை நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாப்பது கட்டாயமான கடமையாகும். இன்று அபிவிருத்தியைப் பற்றிப் பேசுகின்றவர்கள் மண்ணைப் பற்றி சிந்திப்பதில்லை. அப்படி சிந்தித்து இருப்பார்களேயானால் இன்று சிங்களப் பேரினவாத சக்திகள் எங்களது நிலங்களை அபகரிக்க நினைக்கமாட்டார்கள். நாங்கள் தேர்தலுக்காக வேண்டி அரசியல் செய்வர்கள் அல்லர். மாறாக எமது எதிர்காலச்சந்ததியினரின் நலனுக்காகவேண்டியே அரசியல் செய்கின்றோம்.

அதன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பின்னால் நில்லுங்கள் என்று நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இந்த நாட்டிலே ஜனாதிபதித் தேர்தல் வரப்போகின்றது என்று கூறுகின்றார்கள். அது எப்போது வந்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்தநாட்டிலே எதிர்வரும் காலத்தில் வரப்போகும் தேர்தலில் இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன, இவர்கள் இருவரும் பேரினவாதிகள்தான். எவர் ஆண்டாலும் எங்களுக்கு விமோசனம் கிடைக்கப்போவதில்லை” – என்றார்.