ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரி யாழ்.அரச வேலையற்ற பட்டதாரிகள் மகஜர் கையளிப்பு

யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தை திறந்து வைப்பதற்காக பெப்ரவரி 5ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க அனுமதி வழங்குமாறு யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் கோரியுள்ளது.இப்பட்டதாரிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஊர்வலம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். சுமார் 15,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்கவுள்ள நிலையில் 300 பேர் வன்னி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள எத்தனை அரச வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது என்ற தகவல் எதுவும் வெளியிடப்படாததை அடுத்தே தாம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக யாழ்.வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் பா.விஜயெந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை யாழ். பெருமாள் ஆலய முன்றலில் கலந்துரையாடலை மேற்கொண்ட யாழ்.அரச வேலையற்ற பட்டதாரிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பதற்காக அங்கிருந்து அமைதியான முறையில் ஊர்வலமாக ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். அலுவலகத்திற்குச் சென்றனர்.இதன்போது ‘வேலையற்ற பட்டதாரிகளை திரும்பி பாருங்கள் அரசே’, ‘எங்களுக்க வாழ வழி காட்டுங்கள்’ என எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கிய வண்ணம் இவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Recommended For You

About the Author: webadmin