இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தன்னுடன் வருமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்திருப்பது நல்லதொரு நல்லெண்ண சமிக்ஞை என்றும், இந்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏற்பதே ஆக்கப்பூர்வ இணக்க அரசியலுக்கு வித்திடும் செயலாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘நாம் என்றுமே தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்து தொலைதூர நோக்கில் செயற்படுபவர்கள். அரசியல் தீர்க்க தரிசனங்களோடு நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வரும் நடைமுறை யதார்த்த வழிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முன்னரே ஏற்றிருந்தால், எமது மண்ணில் இத்தனை அழிவுகளும் நடந்திருக்காது.
எமது மக்களின் அரசியல் தீர்வும் விரைவாகவே முழுமைப் பெற்றிருக்கும்.
ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காலம் கடந்தாவது
13ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து தொடங்கும் எமது யதார்த்த அரசியல் வழிமுறையை இதயசுத்தியுடன் அணுக வேண்டும்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் காலம் கடந்தாவது கலந்துகொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்திருப்பது எமது அழைப்பின் யதார்த்த எண்ணங்களை ஏற்றதாக இருக்க வேண்டும். இந்நிலையில், ஐனாதிபதியினால் விக்னேஸ்வரனுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பையும் விருப்பமுடன் வரவேற்கின்றோம்.
ஜனாதிபதியின் அழைப்பை முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்பதென்பது, கடந்த காலங்களில் நாம் கூறி நடந்து வந்த நடைமுறை யதார்த்த வழிமுறைக்கு கிடைத்திருக்கும் வெற்றிகளில் ஒன்றாகவே நாம் பார்க்கிறோம்.
ஜனாதிபதியின் இந்த நல்லெண்ண அழைப்பை ஏற்று முதல்வர் விக்னேஸ்வரன், இந்திய பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளச் செல்வதே, நாளை நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துகொண்டு அரிசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கதவுகளைத் திறக்கவும் வழிசமைக்கும் என்றே நாம் நம்புகின்றோம்.
இனிவரும் காலங்களிலாவது சந்தர்ப்பங்களை சரிவரப் பயன்படுத்தும் நடைமுறை சாத்திய அரசியல் வழிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதில் இருந்தே தொடங்க வேண்டும்’ என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Monday
- January 20th, 2025