ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் 100 நாள்கள் வேலைத்திட்டத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
‘நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டம்’ என தலைப்பிட்டு, வெள்ளைவான் கலாசாரம், கழிவு எண்ணெய் கலாசாரம், கசாப்புக்கடை அரசியல் கலாசாரம், இலஞ்ச ஊழல் கலாசாரம் ஆகியவற்றை நீக்கி, தமிழ் மக்களுக்கு அச்சமின்றி அடக்குமுறையின்றி, அடவாடித்தனமின்றி, கௌரவமாக, சுதந்திரமாக வாழ வழியமைத்த நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒட்டப்பட்டுள்ளது.
சுவரொட்டியின் கீழ் வடபகுதி தமிழ் மக்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோரை கண்டறிதல், மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படுதல் ஆகிய விடயங்கள் செய்யப்படவில்லையென பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில் இவ்வாறானதொரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.