அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த ஜனாதிபதியை அங்கு வந்து சந்தித்த உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் அவரிடம் குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டுமென பாடசாலையின் மாணவிகள் மற்றும் பெற்றோர் இணைந்து கடந்த சனிக்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையில் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்ற பின்னர் புதிய அதிபர் பாடசாலைக்கு வந்துள்ளார். இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் அவரை பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்காது வாயிலை மூடி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் புதிய அதிபருக்கு ஆதரவான சிலரினாலேயே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக அங்கு தொடர்ந்த பதற்ற சூழ்நிலை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் தலையீட்டுடன் நேற்றைய தினம் முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.