ஜனாதிபதிக்கு காவடி எடுப்பதை நிறுத்தவும் – சுரேஸ்

SURESH‘வட மாகாணசபையின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கும் ஆளுநருக்கும் காவடி எடுப்பதை நிறுத்திவிட்டு சபை திறம்பட செயற்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களாகவே ஒதுங்கி விடவேண்டும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வலி. தெற்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார பரிசளிப்பு விழா நிகழ்வு நேற்று மருதனார்மடத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் எம்.பி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘வட மாகாணசபையானது, பல இலட்சம் மக்களுடைய உணர்வுகளின் உயிர்த்தியாகத்தின் பின்னர் எமக்கு கிடைத்துள்ளது. ஆகவே வடமாகாணசபை சாதாரணமாக கிடைக்கப்பெறவில்லை என்பதை வடமாகாண சபையின் கீழுள்ள அதிகாரிகள் உணரவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த வடமாகாண சபையில் உள்ள அதிகாரிகள் அரசுக்காக வேலை செய்யப் போகிறார்களா? அல்லது மக்களுக்காக வேலை செய்யப் போகிறார்களா? என்பது தான் தற்போதுள்ள பிரச்சினை’ என்றார்.

‘உள்ளூராட்சி சபைகள் இயங்குவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். ஆனால் உள்ளூராட்சியின் சட்டதிட்டங்கள் இங்கு எவ்வளவு பேருக்கு தெரியும் என்பது அடுத்த கட்டப் பிரச்சனையாக உள்ளது’ என்றார்.

‘இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை இந்த உள்ளூராட்சி பிரச்சினைகள் போல வடமாகாண சபையிலும் இடம்பெறுகின்றது. வடமாகாணசபை கிடைத்து நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் சபையின் பிரதம செயலாளரை மாற்றுவது இயலாது என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு என்று முன்பு ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் தற்போது அவ்வாறு இடம்பெறவில்லை.

வடமாகாண சபைக்கு முழுமையான அதிகாரம் இல்லை. அவ்வாறு முழுமையான அதிகாரங்கள் இருந்தால் ஜனாதிபதி வடமாகாண சபையின் அதிகாரங்களில் தலையிடத் தேவையில்லை’ எனவும் சுரேஸ் எம்.பி மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அனந்தி சசிதரனினின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் முன்வர வேண்டும் – மாவை

காலம் கனியும்வரை காத்திருக்க முடியாது – முதலமைச்சர்