ஜனநாயகத்தின் குரலை அடக்கி ஒடுக்கும் செயல்; யாழ். பல்கலை மூடப்பட்டமைக்கு ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றமை ஜனநாயகத்தின் குரலை அடக்கி ஒடுக்கும் செயல். தமிழர்களின் குரலை அடக்கும் செயல் என்று தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கையை வரவேற்பதாகவும் பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. இது தொடர்பில் சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பொதுநலவாய மாநாட்டு காலப்பகுதியில் ஒருவார காலத்துக்கு அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக யாழ். பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து மூடி வைத்துள்ளனர். இதனைச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பொதுநலவாய மாநாடு நடந்தாலும் இங்குள்ள பிரச்சினைகளை வெளிக் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. தமிழர்களின் உணர்வுகளை அடக்குவதற்கே பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் குரலை அடக்கும் செயலே இது. மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வர வேண்டிய தேவை உண்டு. பல்கலைக்கழகத்தை எந்தவிதமான காரணங்களும் இன்றி மூடி வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்குமாறும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது அதனை நாம் வரவேற்கின்றோம் என்றுள்ளது