ஜகத் ஜயசூரிய போர்க்குற்றம் இழைத்ததாக ஆதாரம் இல்லை! : இலங்கை அரசாங்கம்

முன்னாள் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லையென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஜகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்துக்கள் யாவும் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பிரேசிலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு, இலங்கை அரசாங்கம் எவ்வித ஆதரவையும் வழங்காதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வைத்தியசாலை உள்ளிட்ட பொது இடங்களில் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழப்பதற்கு காரணமாகவும், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் சித்திரவதை நடவடிக்கைகளுக்கு காரண கர்த்தாவாகவும் செயற்பட்டதாக ஜகத் ஜயசூரிய மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்பொன்று, பிரேசில் நீதிமன்றில் ஜகத்திற்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு வழக்கை பதிவுசெய்துள்ளது. பிரேசிலுக்கான முன்னாள் தூதுவராக ஜகத் ஜயசூரிய கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான வழக்குத் தொடரப்பட்ட பின்னர், இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஜகத்திற்கு எதிராக சாட்சி கூற தயாரென்றும் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts