Ad Widget

செந்தூரனின் தற்கொலையில் சந்தேகம்; வடக்கு தொடர்பில் விழிப்பாக இருங்கள்! – மஹிந்த

“செந்தூரனின் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. எனவே, இது தற்கொலையா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்கவேண்டும்” என்று அரசிடம் வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ, வடக்கில் இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

தடுப்பிலுள்ள கைதிகள் குறித்து தனிப்பட்ட கோபம் எனக்கில்லை. அவர்களின் விடயம் நீதிமன்றத்திற்கு உட்பட்டிருந்ததால்தான் அவர்களை விடுதலை செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், குறுகிய அரசியல் நோக்கம், எமது அரசு மீதுள்ள குரோதம் என்பவற்றால் தேசிய பாதுகாப்பை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்றும் அரசிடம் எடுத்துரைத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி உரையாற்றியதன் பின்னர் உரையாற்ற கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். அதையிட்டு நான் சபைக்கு நன்றி கூறுகின்றேன். இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை, பொதுமக்கள் ஆகியோர் பங்களிப்புடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம். இதற்கு உலகில் பல நாடுகள் எமக்கு ஆதரவு வழங்கின.

உலகில் எந்தவொரு நாட்டினது அரசின் முக்கியமான விடயம் தேசிய பாதுகாப்புக்கு பாதுகாப்பாகும். தேசிய பாதுகாப்புக்கு நாம் உரியதை செய்தோம். அது எமது கடமை.

புலிகளை யுத்த ரீதியாக நாம் தோற்கடித்தோம். ஆனால், மேற்குலகில் அதை அடிப்படையாகக்கொண்ட செயற்பாடுகள் இருந்ததால் மீண்டும் தலைதூக்காதிருக்க நாம் விழிப்பாக இருந்தோம். யுத்தத்தின் பின்னர் வடக்கில் 4 தடவைகள் பயங்கரவாதக் குழு தலைதூக்க முயற்சித்தது. எமது புலனாய்வு இராணுவப் பிரிவு அதைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தது.

இப்போது தேசிய பாதுகாப்பு தொடர்பான அவதானம் இருக்கின்றதா என்று எமக்குச் சந்தேகம் உள்ளது. 12 ஆயிரம் பேரை நாம் புனர்வாழ்வளித்து விடுதலைசெய்தோம். தடுப்பில் வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவித்தோம். ஆனால், நீதிமன்றங்களில் வழக்குகள் இருந்த 200, 300 பேரை நாம் விடுவிக்கவில்லை. இவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருந்தன. அதனால்தான் அவர்களை விடுதலை செய்யவில்லை. அதைவிடுத்து அவர்களுடன் எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை.

இவ்வாறான நிலையில் அடிப்படைவாதிகளின் தேவைகள், அழுத்தங்களால் இவர்களை விடுவிக்க வேண்டுமா என்பது குறித்து நீங்கள் பரிசீலனை செய்யுங்கள்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். மறுபுறத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்படுகின்றனர். இராணுவத்தினர் குறித்து விசாரிக்கவேண்டுமாயின் நாட்டில் சட்டம் உள்ளது. அதற்கமைய செயற்படவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போடப்பட்டு பிரபாகரனின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. இது குறித்து அரசு கவனமெடுக்க வேண்டும். 17 வயது தமிழ் மாணவன் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது துயரமான விடயம். இவர் உசுப்பேற்றப்பட்டிருக்கிறாராம். 17 வயது மாணவன் தற்கொலை செய்துகொண்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சந்தேகத்தை போக்கவேண்டும். கவனம் செலுத்தவேண்டும். தற்கொலையா அல்லது வேறு காரணம் உள்ளதா? இதன் பின்னர் ஹர்த்தால் இடம்பெற்றது.

புலம்பெற்ற அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளை நாம் தடைசெய்யவில்லை. இது ஐ.நாவின் தீர்மானம். ஐ.நாவின் வர்த்தமானியில் இது உள்ளது. இன்னும் இந்தத் தடை இருக்கிறது.

நல்லிணக்கம் ஏற்படும் என்று நினைத்து நீங்கள் இதைச் செய்கின்றீர்கள். ஆனால், அதில் இருக்கும் ஆபத்து குறித்து நீங்கள் அவதானத்துடன் இருக்கவேண்டும்.

இலங்கையின் இராணுவத்தை மறுசீரமைக்க 6 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படுவதாக ஜனாதிபதியைச் சந்தித்த பிரிட்டன் பிரதமர் கூறியுள்ளார். வெளிநாட்டவரின் பணம் அவற்றின் தேவைக்கேற்ப இராணுவ மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும். குறுகிய அரசியல் நோக்கம், எனது அரசு மீதுள்ள குரோதம் என்பவற்றிற்கே தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவேண்டாம். மேலும் நல்லிணக்கத்திற்காக புலம்பெயர் அமைப்புகளுக்குத் தேவையானதைச் செய்யவேண்டாம்” – என்றார்.

Related Posts