சூழலியல் விவசாயத்தை நோக்கி என்னும் தொனிப்பொருளில் சேதன விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை (03.07.2015) யாழ் பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
விவசாய இரசாயனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் மூலமும் உணவுச்சங்கிலிகள் மூலமும் இரசாயன நஞ்சுகள் உடலைச் சென்றடைவதால் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக விவசாய இரசாயனங்களைப் பயன்படுத்துவதால் மண்நுண்ணங்கிகளும், மண்புழு போன்ற உயிரினங்களும் இறந்து நிலம் தொடர்ந்து விவசாயம் மேற்கொள்ள முடியாதவாறு இறந்து வருகிறது. இதனால் சூழலுக்கு இசைவான சேதன விவசாயத்தை நோக்கி மீளவும் திரும்ப வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்தே சேதன விவசாயம் தொடர்பான இக்கலந்துரையாடலை வடமாகாண ஆளுநர் அலுவலகமும், வடமாகாண விவசாய அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிககாராவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சிறப்புப் பேச்சாளர்களாக சேதன விவசாயத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்காரா மற்றும் மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் ஆகியோருடன் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன் ஆகியோரோடு பல்கலைகழகப் பேராசிரியர்கள், திணைக்களத் தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாயப் பாட ஆசிரியர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இது போன்ற கலந்துரையாடல் தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்காரா மூலம் இலங்கையின் பல்வேறு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














